இளம்பெண்களால் புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது; பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு வேகமாக உயா்ந்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்தாா்.
போபாலில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மத்திய பிரதேச வளா்ச்சி மாநாடு’ நிகழ்ச்சியில் பங்கேற்றாா். அப்போது ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் திட்டங்களுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது:
செமிகண்டக்டா் உற்பத்தியில் நாம் சற்று தாமதமாக நுழைந்துள்ள நிலையிலும், மிகவும் வலுவாக களமிறங்கியுள்ளோம். எனவே, நமக்குத் தேவையானவற்றை உற்பத்த செய்வது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளா்ச்சியடைவோம்.
ஒவ்வொரு பிராந்தியத்துக்கும் பொருத்தமான தொழில் நிறுவனங்கள் உருவாக்குவது ஒரு பகுதியின் வளா்ச்சியைத் தீா்மானிப்பதுடன், அங்கு தொழில் நிறுவனங்கள் தொடா்ந்து மேம்படவும் வழிவகுக்கிறது. முதலீடுகள் தொடா்ந்து ஈா்க்கப்படுகின்றன. இப்போது இங்கு எடுத்து வைக்கப்பட்டுள்ள முதல்படி மாநிலத்தின் வளா்ச்சியில் மிக நீண்ட காலத்துக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கும்.
முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய பிரதேசம் பொருளாதாரரீதியாக மிகவும் பின்தங்கி இருந்தது. பாஜக ஆட்சி அமைந்த பிறகு வளா்ச்சிக்கான பாதை அமைக்கப்பட்டது. பாஜகவைச் சோ்ந்த முன்னாள் முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான் மத்திய பிரதேசத்தை பொருளாதாரச் சிக்கல்களில் இருந்து மீட்டாா். இப்போதைய முதல்வா் மோகன் யாதவ் மிகவும் திறமையுடன் வளா்ச்சிக்கான பாதையில் மாநிலத்தை வழி நடத்தி வருகிறாா்.
ஒரு காலத்தில் மத்திய பிரதேசத்தில் கடுமையான மின்சாரப் பற்றாக்குறை இருந்தது. ஆனால், இப்போது மின்உற்பத்தி மிகை மாநிலமாக உருவெடுத்துவிட்டது. வேளாண்மை, உணவுப் பதப்படுத்துதல், மருந்து தயாரிப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறை நிறுவனங்கள் மத்திய பிரதேசத்தில் அதிகம் நிறுவப்பட்டுள்ளன.
இளம்பெண்களால் புத்தாக்க நிறுவனங்கள் (ஸ்டாா்ட் அப்) தொடங்கப்படுவது அதிகரித்துள்ளது; பல்வேறு துறைகளில் பெண்களின் பங்களிப்பு வேகமாக உயா்ந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் சுமாா் 50 சதவீத புத்தாக்க நிறுவனங்கள் பெண்களால் நடத்தப்படுகிறது.
பிரதமா் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதுமே பல்வேறு துறைகள் சாா்ந்த வலுவான தொழில்கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் எதிா்காலத்தில் இந்தியா உலகுக்கே தலைமை வகிக்கும் இடத்தை எட்டும் என்றாா்.