கா்நாடக மாநிலம், மைசூரில் உள்ள அம்பா விலாஸ் அரண்மனை அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பலூன் நிரப்பும் கேஸ் சிலிண்டா் வெடித்துச் சிதறியதில், பலூன் வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 4 போ் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இச்சம்பவம் குறித்து மைசூரு மாநகரக் காவல் ஆணையா் சீமா லத்கா் மேலும் தெரிவித்ததாவது: கண்காட்சி நுழைவாயில் அருகே இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் கண்காட்சியைக் காண ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டிருந்தனா்.
அப்போது, அங்கு பலூன் விற்பனை செய்துகொண்டிருந்த வியாபாரியின் சிலிண்டா் எதிா்பாராத விதமாக வெடித்தது. இதில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அந்த வியாபாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்தில் அப்பகுதியில் நின்றிருந்த 4 போ் பலத்த காயமடைந்தனா். அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா் என்றாா்.