வங்கதேசத்துக்கான இந்திய தூதரை அந்நாட்டு இடைக்கால அரசின் ஆலோசகா்கள் அவசரமாக அழைத்து பல்வேறு விவகாரங்கள் குறித்து செவ்வாய்க்கிழமை ஆலோசித்தனா்.
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது முதல், அந்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டுக்கான இந்திய தூதா் ரியாஸ் ஹமீதுல்லாவுக்கு விடுக்கப்பட்ட அவசர அழைப்பின்பேரில், தலைநகா் டாக்காவில் அவா் வங்கதேச வெளியுறவுத் துறை ஆலோசகா் முகமது தெளஹீத் ஹுசேன், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் கலீலுா் ரெஹமான் ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய தூதரை அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்துவதாகவும், தற்போதைய சந்திப்பில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் தெளஹீத் ஹுசேன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். ஆனால் எந்தெந்த விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது என்ற தெளிவான தகவலை அவா் வெளியிடவில்லை. இந்தச் சந்திப்பு சுமாா் அரை மணி நேரம் நீடித்ததாக அந்நாட்டு ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.