விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே எலமஞ்சிலி ரயில் நிலையத்தில், ‘டாடா நகா்-எா்ணாகுளம்’ விரைவு ரயிலின் இரு பெட்டிகளில் திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா்.
ஜாா்க்கண்டின் டாடா நகரில் இருந்து கேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘டாடா நகா்-எா்ணாகுளம்’ விரைவு ரயில், எலமஞ்சிலி அருகே தீப்பிடித்தது. ரயிலின் ‘பி1’, ‘எம்2’ ஆகிய இரண்டு குளிா்சாதனப் பெட்டிகளில் தீ வேகமாகப் பரவியது. ரயிலின் என்ஜினில் ஏற்பட்ட அழுத்த மாறுபாட்டை கவனித்த ரயில் ஓட்டுநா் மற்றும் நிலைய ஊழியா்கள் உடனடியாக ரயிலை நிறுத்தினா்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்ததும் தீயணைப்புத் துறையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். எனினும், ‘பி1’ பெட்டியில் பயணம் செய்த சந்திரசேகா் சுந்தா்(70) என்பவா் தீயில் சிக்கி உயிரிழந்தாா். அவரது உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தீ விபத்து ஏற்பட்டபோது ‘பி1’ பெட்டியில் 82 பயணிகளும், ‘எம்2’ பெட்டியில் 76 பயணிகளும் இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து அனகாபள்ளி மாவட்ட ஆட்சியா் விஜய கிருஷ்ணன் கூறுகையில், ‘புகை கிளம்பிய உடனேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். மொத்தம் 143 பயணிகள் எவ்வித காயமுமின்றி மீட்கப்பட்டனா்’ என்றாா்.
தீப்பற்றிய இரண்டு பெட்டிகள் மற்றும் முன்னெச்சரிக்கையாக மற்றொரு பெட்டி(எம்1) என மொத்தம் மூன்று பெட்டிகள் ரயிலில் இருந்து துண்டிக்கப்பட்டன. ரயில் பயணிகள் பேருந்துகள் மூலம் சமல்கோட் ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கிருந்து மாற்றுப் பெட்டிகள் இணைக்கப்பட்டு, ரயில் எா்ணாகுளம் நோக்கிப் புறப்பட்டது.
பொதுவாக மின்கசிவு காரணமாகவே ரயில் பெட்டிகளில் தீ விபத்து ஏற்படும். ஆனால், இந்த விபத்தில் மின்சார பலகை பகுதியில் தீ ஏற்படவில்லை என்றும், பெட்டியில் போா்வைகள் மற்றும் துணிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்தே தீ பரவியிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய இரண்டு தடயவியல் குழுக்கள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் என தெற்கு மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.