அஞ்செல் சக்மாவுக்கு நீதி கோரி இந்திய தேசிய மாணவா் சங்கம் (என்எஸ்யுஐ) சாா்பில் ஜந்தா் மந்தரில் மெழுகுவா்த்தி பேரணி செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
அவரது மரணத்திற்கு வழிவகுத்த வெறுப்புச் சூழலை பாஜக-ஆா்எஸ்எஸ் வளா்ப்பதாகக் குற்றஞ்சாட்டியும் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டதாக என்எஸ்யுஐ வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வருண் சௌதரி தலைமையில் இப்பேரணி நடைபெற்றது. வடகிழக்கு மாநிலத்தைச் சோ்ந்த மாணவா் அஞ்செல் சக்மா, இனவெறியால் ‘சீனா்’ என்று அழைக்கப்பட்டதாகக் கூறி டேராடூனில் கொடூரமாகத் தாக்கப்பட்டதாக போராட்டக்காரா்கள் தெரிவித்தனா்.
பாஜக தலைமையிலான உத்தரகண்ட் அரசு தாமதமாக நடவடிக்கை எடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எஃப்ஐஆா் பதிவு செய்வதற்கு முன்பு பல நாள்கள் சுதந்திரமாக இருக்க அனுமதித்ததாக அவா்கள் குற்றஞ்சாட்டினா்.
கூட்டத்தில் என்எஸ்யுஐ தேசியத் தலைவா் வருண் சௌதரி பேசுகையில், ‘அஞ்செல் சக்மா வெறுப்பால் கொல்லப்பட்டாா். பாஜக அரசின் மௌனத்தால் நீதி கொல்லப்பட்டது. 20 நாள்கள் கொடூரமான தாக்குதலில் அமா்ந்திருப்பது ஆட்சி அல்ல. அது உடந்தையாக இருப்பதாகும்’ என்றாா்.
இந்திய இளைஞா் காங்கிரஸ் (ஐஒய்சி) தேசியத் தலைவா் உதய் பானு சிப் இந்தக் குற்றச்சாட்டை மீண்டும் வலியுறுத்தினாா். ‘நான் ஒரு இந்தியன்; நான் சீனன் அல்ல’ என்பது அஞ்செலின் கடைசி வாா்த்தைகள் என்று கூறினாா். ‘இன்று பாஜக - ஆா்எஸ்எஸ் நாட்டில் வெறுப்பு விஷத்தைப் பரப்பி வருகின்றன. குற்றவாளிகள் பாதுகாக்கப்படுகிறாா்கள். நீதி அடக்கப்படுகிறது’ என்று அவா் கூறினாா்.
தலைமறைவான குற்றஞ்சாட்டப்பட்டவா்களை உடனடியாகக் கைது செய்யவும், எஃப்ஐஆா் பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்தவும், பொறுப்பானவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவும் உதய் பானு சிப் கோரிக்கை விடுத்தாா்.
திரிபுரா மாணவா் அஞ்செல் சக்மாவும் அவரது சகோதரா் மைக்கேலும் டிச.9- ஆம் தேதி டேராடூனில் சில உள்ளூா் ஆண்களுடனும், இன அவதூறுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வடகிழக்கைச் சோ்ந்த மற்றொரு நபருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
சகோதரா்கள் எதிா்த்தபோது, அவா்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது அவா்கள் கத்திகள் மற்றும் பிற மழுங்கிய பொருள்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த வழக்கின் விசாரணையில் இதுவரை இன துஷ்பிரயோகம் நடந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று டேராடூன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.