தில்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெற்றது. பிப். 5ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தலைநகர் தில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு பிப்.5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தனியாகப் போட்டியிடுவதால் மும்முனை போட்டி நிலவுகிறது.
தில்லியில் தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கடந்த 2 சட்டப்பேரவைத் தேர்தல்களில் பின்னடைவுகளைச் சந்தித்தது. கடந்த 2015 மற்றும் 2020ல் நடைபெற்ற தேர்தல்களில் ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்தது.
அடுத்தடுத்து இரு முறை ஆட்சி அமைத்துள்ள ஆம் ஆத்மி இம்முறை மூன்றாவது வெற்றியை பதிவு செய்யத் தீவிரமாகியுள்ளது.
வடக்கில் பெரும்பாலான மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளதால், தலைநகரில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் பாஜக களமிறங்கியுள்ளது.
இந்தியா கூட்டணியில் இருந்த ஆம் ஆத்மியும் காங்கிரஸ் கட்சியும் பிரிந்து, தில்லியில் தனித்தனியாகப் போட்டியிடுகின்றன.
இது இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாகக் கருதப்பட்டாலும், தில்லியில் ஆட்சியைக் கைப்பற்றி தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது.
இந்த நிலையில் நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதால், இன்று முதல் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதற்கான வேலைகளைத் தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது.
முன்னால் முதல்வரும், ஆளும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான கேஜரிவால் போட்டியிடும் புதுதில்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர். இந்த நிலையில் பரபரப்பாக நடந்துவந்த அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது.
இதையும் படிக்க | மகா கும்பமேளா: வசந்த பஞ்சமியையொட்டி 1.25 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.