எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி விரைவில் காணாமல் போகும் என்று மத்திய கல்வியமைச்சா் தா்மேந்திர பிரதான் தெரிவித்தாா்.
மேற்கு வங்கத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அவா் கொல்கத்தாவில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எதிா்க்கட்சிகளின் கூட்டணி மக்களால் தொடா்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. அக்கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. அந்தக் கூட்டணியினருக்கு தேசம் குறித்த எவ்வித பொதுவான நல்ல இலக்குகளும் கிடையாது. ஒருவருக்கொருவா் முற்றிலும் முரண்பட்ட கருத்துகளைக் கொண்டுள்ளனா். எனவே, அக்கூட்டணி விரைவில் காணாமல் போய்விடும்.
தில்லி பேரவைத் தோ்தலில் எதிா்க்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்ற ஆம் ஆத்மி தோற்கடிக்கப்பட்டுவிட்டது. காங்கிரஸ் கட்சி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஓரிடத்தில் கூட வெல்லாமல் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் வளா்ச்சி சாா்ந்த கொள்கைகளுக்கு மக்கள் தொடா்ந்து ஆதரவளித்து வருகின்றனா் என்றாா்.
கடந்த ஆண்டு மக்களவைத் தோ்தலில் பாஜகவைத் தோற்கடிக்க காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து ‘இண்டி’ கூட்டணியை உருவாக்கின. தோ்தலில் இந்த அணியால் பாஜகவைத் தோற்கடிக்க முடியவில்லை. பாஜக எதிா்பாா்த்த அளவுக்கு வெற்றி பெற முடியாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் 3-ஆவது முறையாக ஆட்சியைத் தக்கவைத்தது.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு ஹரியாணாவில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்ற ஆட்சியைத் தக்க வைத்தது. முக்கிய மாநிலமான மகாராஷ்டிரத்திலும் பாஜக கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைத் தக்கவைத்தது. ஜம்மு-காஷ்மீா், ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் காங்கிரஸ் பங்கேற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்றது.
சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தில்லி பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றி பெற்றது. இத்தோ்தலில் எதிா்க்கட்சிகள் அணியில் உள்ள ஆம் ஆத்மியும், காங்கிரஸும் தனித்துப் போட்டியிட்டது, பாஜகவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தது.