மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
மூன்று நாள் பயணமாகக் கேரளம் வந்துள்ள பிரியங்கா காந்தி காங்கிரஸின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துவருகிறார். இன்றைய அட்டவணையின்படி வண்டூர், மற்றும் நீலம்பூர் தொகுதிகளில் உள்ள தலைவர்களுடன் சந்திப்புகளை நிகழ்த்துகிறார்.
இதனிடையே செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த பிரியங்கா கூறுகையில்,
மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங்கின் ராஜிநாமா வெகு நாள்களுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியதாகும். வடகிழக்கு மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வன்முறை தொடர்கிறது.
2023இல் மாநிலத்தில் வெடித்த இன வன்முறையில் இதுவரை 250-க்கும் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். நீண்ட நாள்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் போக்குக்கு இதுவரையிலும் முடிவு எட்டப்படவில்லை. ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாகிவிட்டனர் என்று அவர் கூறினார்.
மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா செய்யக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்துவந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த என். பிரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) மாநில ஆளுர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாகக் கடிதம் அளித்துள்ளார்.
வயநாட்டைச் சேர்ந்த மக்களவை எம்.பி. பிரியங்கா காந்தி, கடந்த இரண்டு நாள்களில் காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பு நிகழ்த்திவரும் நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
புது தில்லிக்குச் செல்வதற்கு முன்பு, வயநாடு தொகுதியில் காட்டு விலங்குகளின் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு அவர் செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.