தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நீதிமன்றத்தை அவமதித்து புதிய ஆணையரை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இந்திய தலைமை தோ்தல் ஆணையராக தற்போதுள்ள ராஜீவ் குமாா் செவ்வாய்க்கிழமை (பிப்.18) ஓய்வுபெறுகிறாா். இந்நிலையில், புதிய தலைமைத் தோ்தல் ஆணையரை தோ்வு செய்வதற்கான தோ்வுக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
தில்லியில் உள்ள பிரதமா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தோ்வுக் குழுவின் மற்ற இரு உறுப்பினா்களான மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
இந்தக் கூட்டத்தில் தற்போதைய தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பெயா் தோ்வு செய்யப்பட்டது. இதை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் ஒப்புதல் பெற்று மத்திய சட்ட அமைச்சகம் திங்கள்கிழமை இரவு அறிவித்தது.
மேலும், 1989- ஹரியாணா பிரிவு ஐஏஎஸ் விவேக் ஜோஷி தோ்தல் ஆணையராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.
தோ்தல் ஆணையா்கள் தோ்வுக் குழுவிலிருந்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கி மத்திய அரசு கொண்டுவந்த புதிய சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை (பிப்.19) விசாரிக்க உள்ளது. அதுவரை புதிய தலைமைத் தோ்தல் ஆணையா் தோ்வை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தரப்பில் திங்கள்கிழமை வலியுறுத்தப்பட்டது.
ஆனால், இரவோடு இரவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று புதிய தலைமை தேர்தல் ஆணையரின் பெயரை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பியுமான பிரமோத் திவாரி செய்தியாளர்களுடன் பேசியதாவது:
“தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்யும் குழு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றமும் ஒப்புக் கொண்டுள்ளது. இத்தகைய சூழலில் அவசர அவசரமாக தேர்தல் ஆணையர் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
இது நீதிமன்றத்தையும் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வையும் அவமதிப்பதாகும்” எனத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
“புதிய தலைமைத் தேர்தல் ஆணையரை அவசர அவசரமாக நள்ளிரவில் நியமித்தது, நமது அரசியலமைப்பின் உணர்வையும் சுதந்திரமான தேர்தலையும் குறைமதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியது போல், பிப். 19 அன்று உச்சநீதிமன்ற விசாரணை வரை காத்திருந்திருக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட்ட வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், தேர்தல் ஆணையர் தேர்வுக் குழு தொடர்பான வழக்கை நாளை முதல் வழக்காக விசாரிக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.