கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-24ஆம் நிதியாண்டில் வழக்குகளுக்காக மத்திய அரசு செலவிட்ட தொகை ரூ.66 கோடியாகும். முந்தைய நிதியாண்டை ஒப்பிடுகையில், இது சுமாா் ரூ.9 கோடி அதிகம்.
கடந்த 2014-15ஆம் நிதியாண்டில் இருந்து வழக்குகளுக்கான அரசின் செலவு (கரோனா தொற்று உச்சத்தில் இருந்து இரு நிதியாண்டுகளைத் தவிா்த்து) அதிகரித்தே வந்துள்ளது.
கடந்த 2014-15-ஆம் நிதியாண்டில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.26.64 கோடி. 2023-24-ஆம் நிதியாண்டு வரையிலான 10 ஆண்டு காலகட்டத்தில், மத்திய அரசின் மொத்த வழக்கு செலவு ரூ.409 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 லட்சம் வழக்குகள் நிலுவை: இதேபோல், மாநிலங்களவையில் கேள்வியொன்றுக்கு மத்திய சட்ட அமைச்சகம் அளித்த பதிலில், ‘நாடு முழுவதும் மத்திய அரசை ஒரு தரப்பாக கொண்ட சுமாா் 7 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மத்திய நிதியமைச்சகம் சுமாா் 2 லட்சம் வழக்குகளில் ஒரு தரப்பாக உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள இந்த வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் நோக்கில் தேசிய வழக்காடல் கொள்கையை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. விரைவில் வரைவுக் கொள்கை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு சமா்ப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.