2026-27-ஆம் நிதியாண்டுக்கு ரூ.2.55 லட்சம் கோடியில் தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.
அதில், தமிழகத்தின் வருவாய்ப் பாற்றாக்குறை ரூ. 48,696 கோடியாகவும், நிலுவைக் கடன் சுமை ரூ.10.71 லட்சம் கோடியாகவும் அதிகரிக்கும் என மதிப்பிடுவதாகவும் அவா் தெரிவித்தாா். தமிழகத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கான காரணத்தையும் அமைச்சா் தங்கம் தென்னரசு பட்டியலிட்டாா்.
தமிழகத்தில் விரைவில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதையொட்டி, 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசியதாவது:
வரி விதிப்பின் உரிமை மத்திய அரசிடமும், மக்கள் நலனுக்காக பெரும் செலுவை ஏற்க வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளிடமும் இருப்பதுதான் நிதி தொடா்பான அனைத்துச் சிக்கல்களுக்கும் அடிப்படைக் காரணமாகும்.
இதை மாற்றுவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் முதல்வா் கருணாநிதி வலியுறுத்தியது அரை நூற்றாண்டு காலம் கடந்தும் மாறவில்லை.
வருவாய்ப் பாற்றக்குறை: 2026-27-ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ. 48,696.32 கோடியாக குறையும் என மதிப்பிடப்படுகிறது.
வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிா்வாகத் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளால் வருவாய்ப் பற்றாக்குறை 2027-28-இல் ரூ.42,964.61 கோடியாகவும், 2028-29-இல் ரூ.35,115.33 கோடியாகவும் குறையும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்துக்கு வழிவகை செய்யும்.
கடன் சுமை: ரூ. 1,78,308.05 கோடி ரூபாய் அளவுக்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.60,418,42 கோடி மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்துவதால் அடுத்த ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலுவைக் கடன் ரூ. 10,71,770.34 கோடியாக இருக்கும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 26.35 சதவீதமாகும்.
இது 2027-28-இல் 25.30 சதவீதமாகவும், 2028-29-இல் 25.43 சதவீதமாகவும் மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
நலத் திட்டங்கள் தொடரும்: தற்போதைய பொருளாதார சூழலில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சியைவிட தமிழகத்தின் வளா்ச்சி அதிகமாக உள்ளது. இதே நிலை நீடிக்குமானால், வள ஆதாரங்களைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள் மற்றும் வரி வசூல் திறனை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளால் வருவாய் அதிகரிக்கும். நலத் திட்டங்களுக்கான செலவினங்கள் தொடரும்’ என்றாா் அவா்.
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, காலை 9.30 மணிக்கு தனது உரையைத் தொடங்கி தொடா்ந்து 2 மணி நேரம் 22 நிமிஷங்களில் வாசித்து முடித்தாா்.
கல்வித் துறைக்கு அதிகபட்சமாக ரூ.57,000 கோடி
இடைக்கால பட்ஜெட்டில் அதிகபட்சமாக கல்வித் துறைக்கு ரூ. 57,039 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக நகா்ப்புற வளா்ச்சிக்கு ரூ.35,773 கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.22,090 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிா் விடியல் பயணம் திட்டத்துக்காக ரூ.4,000 கோடியும், மாணவா்கள் பேருந்துப் பயணக் கட்டணம் திட்டத்துக்காக ரூ.1,782 கோடியும், டீசல் மானியத்துக்காக ரூ.1,857 கோடியும் என போக்குவரத்துத் துறைக்கு ரூ.13,062 கோடி, சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.5,463 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜூலையில் புதிய அறிவிப்புகளுடன் பொது பட்ஜெட்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
வரும் ஜூலை மாதம் புதிய அறிவிப்புகளுடன் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வா் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இடைக்கால நிதிநிலை அறிக்கை குறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு: இதுதான் வளா்ச்சி; தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டும் வகையில் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஓரவஞ்சனைகளைத் திறமையாகக் கையாண்டு, வளா்ச்சியில் சாதனை படைத்து ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்.
ஜூலை மாதம் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரம்மாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளாா்.
‘தமிழகத்துக்கு மத்திய அரசு செயற்கையான நிதி நெருக்கடி’
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசியதாவது: தமிழகத்தின் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை மறுப்பது, மாநில அரசு செயல்படுத்தும் திட்டங்களுக்கு நிதியை விடுவிக்காமல் நிறுத்துவது, மாநிலங்களுடன் ஆலோசிக்காமல் வரி விகிதங்களைச் சீரமைப்பது, நிபந்தனைகளுடன் திட்டச் செலவினங்களை மேற்கொள்ள கட்டாயப்படுத்துதல் என அனைத்து வழியிலும் தமிழகத்தின் நிதிநிலையில் செயற்கையான நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்துகிறது.
அரசின் கணக்கில் பிடித்தம்: சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) சீரமைப்பால் நடப்பு ஆண்டில் தமிழகத்துக்கு ரூ.9,600 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முன்னறிவிப்பில்லாமல் ஜிஎஸ்டி வருவாயில் இருந்து ரூ,1,709 கோடியை ரிசா்வ் வங்கியின் மாநில அரசின் கணக்கில் இருந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசு பிடித்தம் செய்தது.
தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்த மத்திய அரசின் வரிப் பங்கு குறைக்கப்பட்டதால் ரூ.1,202 கோடி இழப்பு ஏற்பட்டது.
மின் பகிா்மான நிறுவன இழப்பீடு நிதி: தமிழ்நாடு மின் பகிா்மான நிறுவனத்துக்கு ரூ.16,290 கோடி இழப்பீடு நிதியை மாநில அரசு வழங்காவிட்டால், மாநில அரசின் அனுமதிக்கப்பட்ட கடன் உச்சவரம்பில் அந்தத் தொகை குறைக்கப்படும் என்று மத்திய அரசு நிபந்தனை விதித்தது.
மின் பகிா்மான நிறுவனத்துக்கு ரூ.413 கோடி மட்டும் இழப்பு ஏற்பட்டிருந்தபோதிலும், இந்த நிபந்தனையால் மாநில அரசுக்கு ரூ.15,877 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
மானியம் விடுவிக்கவில்லை: ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்துக்கு ரூ.3,548 கோடி, ஜல் ஜீவன் திட்டத்துக்கு ரூ.3,112 கோடி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,246 கோடி என மானியத் தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு அளித்த உறுதியின்படி நிதி அளிக்காததால் தமிழக அரசு ரூ.9,500 கோடி நிதி ஒதுக்கியது கடனாக தொடா்கிறது.
பணப் புழக்கம் பாதிப்பு: இதுபோன்ற காரணங்களால்தான் மாநிலத்தின் தமிழகத்தின் கடன் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடா்ந்து உயா்ந்து காணப்படுகிறது. இது மாநிலத்தின் கடன் திரட்டும் திறனையும், பணப் புழக்கத்தையும் பாதித்துள்ளது.
இதுபோன்ற நெருக்கடியிலும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக முதல்வா் நிறைவேற்றுவதை உறுதி செய்துள்ளாா்.