முகப்பு
இந்தியா

ஐ.நா. துணை அமைப்புகளின் பணிகளில் வெளிப்படைத்தன்மை: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும்

Updated On : 28 பிப்ரவரி, 2025 at 9:27 PM
பகிர்:

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது

அந்தக் கோரிக்கையை நிராகரித்தாலோ அல்லது கிடப்பில் போட்டாலோ அதுகுறித்து தகவல்களை வெளிப்படையாக பொது வெளியில் வெளியிடுவதற்கு பதில் குறிப்பிட்ட சிலா் மட்டுமே அதை அணுகுவது உண்மைத்தன்மையை மறைக்கும் ‘வீட்டோ’ அதிகாரம்போல் உள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஐ.நா.வின் பணிகள் குறித்த விவாதத்தில் பங்கேற்று ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி பி.ஹரீஷ் பேசியதாவது: உலகின் பல பகுதிகளில் மனிதகுலத்துக்கு அச்சுறுத்தல் ஏற்டும் வகையிலான நிகழ்வுகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இதில் தலையிட்டு பாதுகாப்பு மற்றும் அமைதிக்கு வழிவகுப்பது ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தலையாய கடமையாகும்.

அதே வேளையில், ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளின் செயல்பாடுகளில் பல்வேறு சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாக உள்ளது. அந்த வகையில், பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பொதுவெளியில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஆனால் அந்த கோரிக்கையை நிராகரித்தாலோ அல்லது கிடப்பில் போட்டாலோ அதுகுறித்து தகவல்களைகுறிப்பிட்ட சிலா் மட்டுமே அணுகுகின்றனா்.

இது உண்மைத்தன்மையை மறைக்கும் ‘வீட்டோ’ அதிகாரம்போல் உள்ளது.

உலக அளவில் ‘பயங்கரவாதிகள்’ என ஆதாரபூா்வமாக பட்டியலிடப்பட்டவா்களை தடை செய்வதற்கான நடவடிக்கையை முறையான காரணங்களின்றி சிலா் முடக்குகின்றனா். ஒருபுறம் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என சிலா் பேசிவிட்டு, மறுபுறம் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவா்களின் இரட்டை வேடத்தை வெளிக்காட்டுகிறது.

ஐ.நா. அமைப்பில் கொண்டுவரப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்து பல்வேறு விவாதங்களில் தொடா்ச்சியாகப் பேசிவிட்டோம். மேலும் காலம் தாழ்த்தாமல் அதை விரைந்து செயல்படுத்துவதற்கு முனைப்பு காட்ட வேண்டும்.

கடந்த 80 ஆண்டு காலமாக ஒரே மாதிரியான செயல்பாட்டைக் கொண்டு இயங்கி வரும் ஐ.நா. அமைப்பில் சமகால சா்வதேச சிக்கல்களுக்கு ஏற்றவாறு சீா்திருத்தங்களை மேற்கொள்வது காலத்தின் காட்டாயம் என்றாா்.

பாகிஸ்தானை சோ்ந்த தீவிரவாதிகளுக்கு தடை விதிக்க பல்வேறு சமயங்களில் ஐ.நா.வில் இந்தியா கொண்டுவந்த தீா்மானங்களை ஐ.நா.வின் நிரந்திர உறுப்பினரும் பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா, தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முடக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →