அரவிந்த் கேஜரிவால், மமதா பானர்ஜி(கோப்புப்படம்) ANI
இந்தியா

தில்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு...

DIN

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சிக்கு அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி ஆதரவு தெரிவித்த நிலையில், தற்போது மம்தாவும் ஆதரவு தெரிவித்திருப்பது எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தில்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கு பிப். 5-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தோ்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. தோ்தல் முடிவுகள் பிப். 8-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளன.

தேசிய அளவிலான ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி, தில்லி பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. 70 தொகுதிகளுக்குமான வேட்பாளா்களை அக்கட்சி ஏற்கெனவே அறிவித்துவிட்டது. இதனால், தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி - பாஜக - காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி உருவாகியுள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு அதிா்ச்சி அளிக்கும் வகையில், தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக சமாஜவாதி கட்சி செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதற்காக சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவால், ‘ஆம் ஆத்மிக்கு ஆதரவு அளித்த அகிலேஷ் யாதவுக்கு நன்றி. இதற்காக நானும், தில்லி மக்களும் பெருமை கொள்கிறோம்’ என்று பதிவிட்டாா்.

இந்நிலையில், ‘இண்டி’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அரவிந்த் கேஜரிவால், ‘தில்லி பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்திருக்கிறது. இதற்காக மம்தா பானா்ஜிக்கு தனிப்பட்ட முறையில் கடமைப்பட்டுள்ளேன். கட்சிக்கு அனைத்து தருணங்களிலும் ஆதரவு தெரிவித்து வருவதற்கு நன்றி’ என்று குறிப்பிட்டாா்.

கேஜரிவாலின் பதிவுக்கு பதிலளித்து மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் தலைவா் டெரிக் ஓபிரையன் வெளியிட்டுள்ள பதிவில், ‘உங்களுக்கு (ஆம் ஆத்மி) பின்னால் நாங்கள் இருக்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

ஆம் ஆத்மிக்கு சமாஜவாதி, திரிணமூல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருப்பது, ‘இண்டி’ கூட்டணியில் தன்னை பிரதானமாக முன்னிறுத்திவரும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாகப் பாா்க்கப்படுகிறது.

ஏற்கெனவே, ‘இண்டி’ கூட்டணி தலைமைப் பொறுப்பை தனக்கு அளித்தால், மேற்கு வங்கத்தில் இருந்தபடியே திறம்பட கையாள தயாராக உள்ளேன் என்று குறிப்பிட்டு கூட்டணியில் மம்தா பெரும் சலசலப்பை ஏற்படுத்தினாா். இதற்கு தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சித் தலைவா் சரத் பவாா் உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்தனா்.

அதுபோல, நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரின்போது, அதானி விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் நடத்திய தொடா் போராட்டங்களில் சமாஜவாதி கட்சி பெரிய அளவில் பங்கேற்காததும், பேசுபொருளானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

குடியரசு துணைத் தலைவருடன் மோரீஷஸ் பிரதமர் சந்திப்பு!

சித்திரச் செவ்வானம்... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அலை மேலே பனித்துளி... சோபிதா துலிபாலா!

SCROLL FOR NEXT