தில்லியில் வென்றால் ரூ.25 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு: காங்கிரஸ் வாக்குறுதி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் புதிய வாக்குறுதி..
தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி வென்றால் ரூ.25 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
தலைநகர் தில்லியில் பிப்ரவரி 5-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றது. அந்தவகையில் காங்கிரஸ் புதிய வாக்குறுதி ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி, தில்லியில் ஜீவன் ரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.25 லட்சத்துக்கான இலவச மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முன்னாள் முதல்வருமான அசோக் கெலாட் கூறியதாவது,
தில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இலவச மருத்துவக் காப்பீடு திட்டம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். தில்லி மக்களின் மருத்துவத் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக கட்சியின் உறுதிப்பாட்டை இந்த திட்டம் பிரதிபலிக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் மக்களுக்கு விரிவான சுகாதாரக் காப்பீட்டை வழங்குவதை காங்கிரஸ் அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த காப்பீட்டின் மூலம் தீவிர நோய்களுக்கான மருத்துவச் செலவுகள், மருத்துவமனையில் சேர்த்தல் மற்றும் சிகிச்சைகள் ஆகியவை உள்ளடக்கியது என்று அவர் கூறினார்.