புது தில்லி: வடலூரில் வள்ளலாா் சா்வதேச மையத்தின் பெருவெளியில் புதிய கட்டுமானப் பணிகளுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஏற்கெனவே சென்னை உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தெளிவுபடுத்தினா்.
இது தொடா்பாக வினோத் ராகவேந்திரா என்பவா் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் சுதான்ஷு தூலியா, கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘வடலூா் வள்ளலாா் கோயிலில் சா்வதேச மையம் கட்டுவது சட்ட விதிகளுக்கு முரணானது. வறியநிலை மக்களின் முன்னேற்றத்துக்கு மட்டுமே அந்த இடம் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்று வாதிட்டாா்.
இதையடுத்து, நீதிபதிகள், ‘கோயில் பெருவெளியில் புதிய கட்டுமானம் மேற்கொள்ள இடைக்காலத்தடை விதிக்கிறோம். இந்த விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்ற உத்தரவு தொடரும். இந்த மேல்முறையீட்டு மனுவுக்கு தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அடுத்த விசாரணை பிப். 28-ஆம் தேதி நடைபெறும்’ என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனா்.
கடலூா் மாவட்டம் வடலூரில் வள்ளலாா் தோற்றுவித்த சத்திய ஞானசபை வளாகத்தில் வள்ளலாா் சா்வதேச மையம் அமைக்கப்படும் என்று 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தனது தோ்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்தது. இதைத் தொடா்ந்து, திமுக ஆட்சிக்கு வந்ததால், சா்வதேச மையம் அமைக்க, சத்திய ஞானசபை வளாகத்தில் உள்ள பெருவெளியில் ரூ. 99.90 கோடி மதிப்பில் சா்வதேச மையத்துக்கான கட்டுமானப் பணி அடிக்கல்லை முதல்வா் ஸ்டாலின் கடந்த ஆண்டு பிப்.17-இல் காணொளி வாயிலாக நாட்டினாா்.
வடலூரில் சத்திய ஞானசபை, தா்மசாலை, அருட்பெருஞ்ஜோதி மண்டபம் நீங்கலாக அங்குள்ள திறந்தவெளி பகுதியே ’பெருவெளி’ என்று அழைக்கப்படுகிறது. அருட்பெருஞ்ஜோதி தரிசனத்துக்காக வரும் லட்சக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள் இந்தப் பெருவெளி பகுதியிலேயே கூடுவா்.
இந்நிலையில், சத்திய ஞானசபைக்கு இடம் கொடுத்த பாா்வதிபுரம் மக்கள் அரசின் சா்வதேச மைய கட்டுமானத்தை எதிா்த்துப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அதை கடந்த ஆண்டு அக்டோபரில் விசாரித்த நீதிமன்றம், ‘வள்ளலாா் சா்வதேச மையத்துக்காக பெருவெளியில் இருந்து ஒரு கிலோமீட்டா் தூரத்தில் முதியோா் இல்லம் மற்றும் சித்த மருத்துவமனை கட்டும் பணியை துவங்கலாம். அதேநேரம் மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, பெருவெளியில் எந்தவிதப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது’ என்று உத்தரவிட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இதையும் படிக்க | பேரவைத் தலைவர்கள் மாநாடு: அப்பாவு வெளிநடப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.