முகப்பு
இந்தியா

தில்லி தேர்தல்: 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டி!

தில்லி பேரவைத் தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்கள் பற்றி..

Updated On : 21 ஜனவரி, 2025 at 10:19 AM
பகிர்:

70 உறுப்பினர்களைக் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்குப் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 699 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிட உள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 2020-ல் நடைபெற்ற தில்லி பேரவைத் தேர்தலில் 672 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதுதொடர்பாக தில்லி தலைமைத் தேர்தல் அதிகாரியின் கூற்றுப்படி,

பாஜகவின் பர்வேஷ் வர்மா மற்றும் காங்கிரஸின் சந்தீப் தீக்ஷித் ஆகியோருக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான அரவிந்த் கேஜரிவால் தீவிரப் போட்டியில் ஈடுபட்டுள்ள புதுதில்லியில் அதிகபட்சமாக 23 வேட்பாளர்கள் உள்ளனர்.

புது தில்லியைத் தொடர்ந்து ஜனக்புரி 16 வேட்பாளர்களுடன், ரோஹ்தாஸ் நகர், காரவால் நகர் மற்றும் லக்ஷ்மி நகர் ஆகியவற்றில் தலா 15 வேட்பாளர்கள் உள்ளனர். மாறாக, படேல் நகர் மற்றும் கஸ்தூரிபா நகர் ஆகிய இடங்களில் தலா ஐந்து பேர் வீதம் குறைந்த எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் உள்ளனர்.

2020ல் பட்டியலின வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட படேல் நகர் தொகுதியில், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான போட்டியாளர்கள் வெறும் நான்கு பேர் மட்டுமே களத்தில் போட்டியிட்டனர்.

70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 38 தொகுதிகளில் 10க்கும் குறைவான வேட்பாளர்கள் உள்ளனர். திலக் நகர், மங்கோல்புரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் போன்ற குறிப்பிடத்தக்க சட்டமன்ற தொகுதிகளில் தலா 6 வேட்பாளர்களும், சாந்தினி சௌக், ராஜேந்திர நகர் மற்றும் மாளவியா நகர் ஆகிய தலா 7 பேரும் போட்டியிடுகின்றனர்.

ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸும் 70 இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன, பாஜக 68இல் போட்டியிடுகிறது, அதன் கூட்டணிக் கட்சிகளான ஜனதா தளம் (யுனைடெட்) மற்றும் லோக்தந்திரிக் ஜன் சக்தி கட்சிக்கு இரண்டு இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) 69 தொகுதிகளில் வேட்பாளர்களை நியமித்துள்ளது.

ஜனவரி 10ஆம் தேதி தொடங்கிய ஒரு வார கால வேட்புமனு தாக்கலில் மொத்தம் 1,522 வேட்புமனுக்களில் 981 வேட்பாளர்கள் வேட்புமனு சமர்பித்தனர்.

ஜனவரி 18 அன்று ஆய்வுக்குப் பிறகு இறுதி எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஜனவரி 20 அன்று திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி. பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 8-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.