தில்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை புதன்கிழமை சந்தித்து டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தை கைவிடக் கோரி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் மனு அளித்த அரிட்டாபட்டி கிராம பிரதிநிதிகள். உடன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜகவுக்கான தேசிய இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம.சீனிவாசன் உள்ளிட்டோர். 
இந்தியா

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அறிவிக்கப்படும்.

DIN

நமது சிறப்பு நிருபர்

புது தில்லி: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியுடனான ஆலோசனைக்குப் பிறகு அதிகாரபூர்வ முடிவு அறிவிக்கப்படும் என மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

தன்னைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையிலான குழுவினரிடம் அவர் இந்தத் தகவலை கூறினார்.

மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பரில் ஏலதாரர் நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்தது. இந்நிலையில், சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி அரிட்டாபட்டி மற்றம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தமிழக அரசும் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இத்திட்டத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக் குழுவினர் தில்லியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அவரது சாஸ்திரி பவன் அலுவலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சந்தித்தனர்.

இச்சந்திப்பின்போது மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம.சீனிவாசன் ஆகியோரும் உடனிருந்தனர். சுரங்கத் திட்டத்தை முழுமையாக திரும்பப் பெறக் கோரும் மனுவையும் அவர்கள் மத்திய அமைச்சரிடம் அளித்தனர்.

இந்தச் சந்திப்பு குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியது: அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என பாஜக அளித்திருந்த உறுதிமொழியை நிச்சயமாக நிறைவேற்றுவோம். அங்கு திட்டம் நிறைவேற்றப்படாது என்ற உறுதிமொழியை மத்திய அமைச்சர் வழங்கியுள்ளார். தன்னை நம்பிய மக்களை பிரதமர் நரேந்திர மோடி கைவிடவில்லை.

தமிழகத்தில் அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி ஆகிய இடங்களில் மட்டுமே டங்ஸ்டன் கனிம வளம் உள்ளதாக தொல்லியல் ஆய்வுத் துறை கண்டறிந்துள்ளது. அதன்பேரிலேயே அங்கு டங்ஸ்டன் எடுக்கும் ஏல ஒப்பந்தத்தை மத்திய அரசு கோரியது. இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே நடந்த கடிதப் பரிவர்த்தனைகளில், திட்டத்தைக் கைவிடவோ ரத்து செய்யவோ மாநில அரசு கோரவில்லை. ஏலதாரர் நிறுவனம் தேர்வான பிறகே மத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கினர்.

ஏல நடைமுறைகளை மேற்கொள்ள மட்டுமே மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்மூலம் கிடைக்கும் வருவாய் அனைத்தும் மாநிலத்துக்கே செல்லும். இருப்பினும், மக்கள் போராடுவதால் அவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு மதிப்பளித்துள்ளது. டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிரான மக்களின் மனநிலையை மத்திய அமைச்சரிடம் விளக்கினோம். பிரதமரிடம் பேசி இறுதி முடிவை வியாழக்கிழமை (ஜன. 23) அதிகாரபூர்வமாக வெளியிடுவதாக அவர் கூறியுள்ளார் என்றார் அண்ணாமலை.

முன்னதாக, இதே விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை அண்ணாமலை தலைமையிலான பாஜகவினர் இருமுறை சந்தித்துப் பேசினர். கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பரில் சந்தித்தனர். அதைத் தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைய ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் பெற்ற இடங்களில் பல்லுயிர் வரலாற்றுத் தலம் உள்ள பகுதிகள் நீங்கலாக மற்ற இடங்களில் திட்டத்தை மறு ஆய்வுக்கு உட்படுத்துமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்தை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் உலகளவில் 3ஆம் இடத்தில் இந்தியா: ஜெ.பி.நட்டா

மெல்ல விடைகொடு மனமே.. அரசு இல்லத்தை 8 மாதங்களுக்கு பிறகு காலி செய்தாா் டி.ஒய்.சந்திரசூட்!

போக்ஸோவில் ஆசிரியா் கைது

வழிப்பறி: 3 போ் கைது

நாய்க்குட்டிகளோடு பயணிகள் விளையாடும் புதிய முன்னெடுப்பு: ஹைதரபாத் விமான நிலையத்தில் அறிமுகம்

SCROLL FOR NEXT