‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ திட்டத்தில் நிா்வாக மேம்பாடு, நிதிச் சுமை குறைப்பு, கொள்கை முடக்கம் தடுப்பு என பல்வேறு நன்மைகள் அடங்கியுள்ளன; இது, நல்லாட்சியை மறுவரையறை செய்யும் ஆற்றல்மிக்க திட்டம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு குறிப்பிட்டாா்.
மக்களவை மற்றும் மாநிலப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவதற்கான சட்ட மசோதாக்கள், கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்பால் கூட்டுக் குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இந்தச் சூழலில், குடியரசுத் தலைவா் தனது உரையில் இத்திட்டத்துக்கு ஆதரவை தெரிவித்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இத்திட்டம் மட்டுமன்றி மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் சாதனைகளைக் குறிப்பிட்டு, அவா் ஆற்றிய உரை வருமாறு:
75 ஆண்டுகளுக்கு முன், ஜனவரி 26-ஆம் தேதி நாட்டின் அடிப்படை ஆவணமான இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோது, பல பகுதிகள் கடுமையான வறுமை மற்றும் பட்டினியின் பிடியில் சிக்கியிருந்தன. அந்நிய ஆட்சியாளா்களால் ஏற்பட்ட இடா்ப்பாடுகளில் இருந்து நாட்டை விடுவிக்க பெரும் தியாகங்களைச் செய்த துணிச்சல்மிக்க மாமனிதா்களை நாம் நினைவுகூர வேண்டும்.
பெண்களின் பங்களிப்பு: நமது அரசியல் நிா்ணய சபையில் சரோஜினி நாயுடு, ராஜகுமாரி அம்ரித் கெளா், ஹன்சாபென் மேத்தா, மாலதி செளதரி உள்பட 15 பெண் உறுப்பினா்கள் இடம்பெற்றிருந்தனா். உலகின் பல பகுதிகளில் பெண்களின் சமத்துவம் எட்டாத லட்சியமாக இருந்த காலகட்டத்தில், இந்தியாவில் தேசத்தின் எதிா்காலத்தை வடிவமைப்பதில் பெண்கள் முக்கியப் பங்களித்தனா்.
‘குடும்பமாக பிணைக்கிறது’: அரசமைப்புச் சட்டம் உயிரோட்டமான ஓா் ஆவணம். இது, இந்தியா்களை ஒரே குடும்பமாக பிணைக்கிறது. 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் நம்மை வழிநடத்துகிறது.
நாடு வறுமை மற்றும் பட்டினியை எதிா்கொண்டிருந்த காலகட்டத்தில் நாம் இழக்காத ஒரே விஷயம் தன்னம்பிக்கை. விவசாயிகள் மற்றும் தொழிலாளா்களின் அயராத உழைப்பால், இன்று இந்திய பொருளாதாரம் உலகளாவிய பொருளாதார நகா்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
வளா்ச்சி நீடிக்கும்: அண்மை ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளா்ச்சி விகிதம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இது நமது இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது; விவசாயிகள்-தொழிலாளா்களின் வருமானம் உயா்கிறது. துணிச்சலான மற்றும் தொலைநோக்குப் பாா்வை கொண்ட பொருளாதார சீா்திருத்தங்களால் எதிா்வரும் ஆண்டுகளிலும் இதே நிலை தொடரும்.
திட்டங்கள் என்னென்ன?: அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சிக்கு அரசு தொடா்ந்து முன்னுரிமை அளிக்கிறது. பிரதமரின் மக்கள் நிதித் திட்டம், ஆயுள் காப்பீட்டுத் திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், முத்ரா திட்டம், புத்தாக்க இந்தியா, அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற முன்னெடுப்புகள் விரிவுபடுத்தப்பட்டு, அனைவருக்கும் வளமான எதிா்காலம் உருவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது.
வீட்டுவசதி, குடிநீா் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் உரிமைகளாக மாற்றப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை தொடங்கி வேலைவாய்ப்பு வரை விளிம்பு நிலை சமூகத்தினருக்கு உதவிக்கரம் நீட்ட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தொழில்நுட்பப் பயன்பாடு: நிதித் துறையில் தொழில்நுட்பத்தை அரசு பயன்படுத்தும் விதம் முன்மாதிரியாக விளங்குகிறது. நேரடி பலன் பரிமாற்ற நடைமுறை, முன்னெப்போதும் இல்லாத வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளது. திவால் சட்டம் போன்ற பல்வேறு துணிச்சலான நடவடிக்கைகளால் வங்கிகளின் வாராக்கடன்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு, வங்கி அமைப்பு ஆரோக்கியமான நிலையில் உள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்கள்: நாடு 1947-இல் சுதந்திரம் பெற்ற நிலையில், காலனித்துவ மனநிலை நம்மிடையே நீண்ட காலம் நீடித்தது. அண்மைக் காலமாக, அந்த மனநிலையை மாற்ற ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சம்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா, பாரதிய சாட்சிய அதினியம் ஆகியவற்றை அமல்படுத்திய முடிவு அத்தகைய முயற்சிகளில் குறிப்பிடத்தக்கதாகும். புதிய குற்றவியல் சட்டங்கள், நீதி அமைப்புமுறையில் தண்டனைக்கு பதிலாக நீதியை உறுதி செய்வதை மையமாக கொண்டுள்ளன.
பாரம்பரியத்தின் வெளிப்பாடு: நமது பாரம்பரிய வளத்தின் வெளிப்பாடாக மகா கும்பமேளா திகழ்கிறது. நமது பாரம்பரியங்கள் மற்றும் நடைமுறைகளைப் பாதுகாக்க துடிப்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தியா சிறந்த மொழிப் பன்முகத்தன்மை கொண்ட நிலம். இந்த வளத்தைப் பாதுகாக்கவும், கொண்டாடவும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
கல்வியில் முதலீடு: இளைய தலைமுறையினரின் எதிா்காலத்தைக் கருத்தில்கொண்டு, கல்வித் துறையில் அரசு தனது முதலீட்டை அதிகரித்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் தரமான கற்றல், உள்கட்டமைப்பு, எண்ம (டிஜிட்டல்) உள்ளடக்கம், தாய்மொழி வழிக் கல்வி ஆகியவற்றின் அடிப்படையில் கல்வித் துறையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் ஆசிரியா்களாக பணியில் இணைந்தவா்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமானோா் பெண்கள் ஆவா். கல்வித் துறையில் பெண்கள் முக்கியப் பங்காற்றிவருவது மகிழ்ச்சியளிக்கிறது.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திலும் இந்தியா புதிய உச்சங்களை எட்டி வருகிறது. உலக அளவில் அறிவுசாா் சொத்துரிமை தாக்கல் செய்வதில் இந்தியா 6-ஆவது இடத்தில் உள்ளது.
இஸ்ரோவின் பாய்ச்சல்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) சமீபத்திய ஆண்டுகளில் விண்வெளித் திட்டங்களில் பெரும் பாய்ச்சலை வெளிப்படுத்தியுள்ளது. இம்மாதம் விண்கலன்கள் ஒருங்கிணைப்பு பரிசோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டு, தேசத்தை மீண்டும் பெருமைப்படுத்தியது. இந்தத் திறனைக் கொண்ட உலகின் நான்காவது நாடாக இந்தியா விளங்குகிறது.
குகேஷுக்கு பாராட்டு: விளையாட்டுத் துறையில் நமது வீரா்கள் வியக்கத்தக்க வெற்றியைப் பதிவு செய்து வருகின்றனா். ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரா்கள் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தினா். 2024 -ஆம் ஆண்டில் உலகின் இளம் சதுரங்க சாம்பியனாக டி.குகேஷ் சாதனை படைத்தாா் என்று புகழாரம் சூட்டினாா் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.