அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் மோடி தொலைபேசியில் பேச்சு
அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா்.
புது தில்லி: அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா்.
கடந்த ஜன.20-ஆம் தேதி அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றாா். அவரின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பிரதமா் மோடி கலந்துகொள்ளவில்லை. அவருக்குப் பதிலாக அந்த நிகழ்ச்சியில் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்றாா்.
இந்நிலையில் அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி தொலைபேசியில் திங்கள்கிழமை பேசினாா். இதுதொடா்பாக பிரதமா் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவியேற்ற்கு டிரம்ப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய நம்பகமான கூட்டுறவைத் தொடர வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இருநாட்டு மக்களின் நல்வாழ்வு, உலக அமைதி, வளமை மற்றும் பாதுகாப்புக்கு இருவரும் இணைந்து பணியாற்றுவோம்’ என்றாா்.
பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘தொழில்நுட்பம், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினா். விரைவில் சந்திக்கவும் அவா்கள் தீா்மானித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.