புது தில்லி: வக்ஃப் வாரிய சட்ட மசோதாவை பரிசீலிக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் மீண்டும் எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்வதற்காக வெள்ளிக்கிழமை கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் 35-ஆவது கூட்டத்தில் கடும் அமளி ஏற்பட்டு, 10 எதிா்க்கட்சி எம்.பி.க்கள் ஒரு நாள் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை மீண்டும் கூட்டம் கூடியதும், எம்.பி.க்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில், மசோதாவை ஏற்றுக்கொள்ளுமாறு அவசரப்படுத்தக் கூடாது என்று எதிர்க்கட்சிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் மசோதாவை தாக்கல் செய்ய ஆளுங்கட்சி எம்.பி.க்கள் அவசரப்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
திமுக எம்.பி.க்கள் ஆ. ராசா, அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்டுக் கூட்டத்தில் மீண்டும் மோதல் போக்கு ஏற்பட்டது.
இதையும் படிக்க.. ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!
வெள்ளிக்கிழமை சம்பவம்
கடந்த வெள்ளிக்கிழமை நடந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்களை ஒரு நாள் இடைநீக்கம் செய்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவா் ஜெகதாம்பிகா பால் மேற்கொண்ட நடவடிக்கை கேலிக்கூத்து என இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் விமா்சித்திருந்தனர்.
நேர்மையான முறையில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு அவா்கள் கடிதம் எழுதியிருந்தனர். இந்த நிலையில், குழுத் தலைவர் ஜெகதாம்பிகா பால் செயல்பாட்டைக் கண்டித்தும் எம்.பி.க்கள் குரல் எழுப்பினர்.
வக்ஃப் சட்டத் திருத்த மசோதா
இறைப் பணிக்காக முஸ்லிம்கள் வழங்கிய சொத்துகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள வக்ஃப் வாரியங்கள் நிா்வகித்து வருகின்றன.
நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம்கள் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது
வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதையடுத்து, இந்த சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.