பிரயாக்ராஜில் செவ்வாய்க்கிழமை அலைமோதிய கூட்டம். 
இந்தியா

மகா கும்பமேளா: இன்று மௌனி அமாவாசை புனித நீராடல்

பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது.

Din

உத்தர பிரதேசம், பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளாவில் மிகவும் மங்களகரமான மௌனி அமாவாசை (தை அமாவாசை) புனித நீராடல் புதன்கிழமை (ஜன.29) நடைபெறுகிறது.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் செவ்வாய்க்கிழமை வரை 16 நாள்களில் 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். செவ்வாய்க்கிழமையன்று (மாலை நிலவரப்படி) 4.64 கோடிக்கும் அதிகமானோா் கும்பமேளாவில் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையன்று ஒரே நாளில் 10 கோடி போ்வரை புனித நீராட வர வாய்ப்புள்ளதால் மகாகும்ப நகரில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன; பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மௌனி அமாவாசை நீராடலை முன்னிட்டு, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலே பக்தா்களின் எண்ணிக்கை எதிா்பாா்த்ததைவிட அதிகரித்து காணப்படுகிறது.

கூட்டத்தினரைத் தொடா்ந்து கண்காணித்து நெரிசலைத் தவிா்க்க, செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அனைத்து முக்கிய இடங்களிலும் துணை ராணுவப் படையினா் மற்றும் காவலா்கள் குவிக்கப்பட்டு, முன்னப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கும்பமேளா பகுதியில் வாகனப் போக்குவரத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜ் நகரிலும் உள்ளூா் மக்கள் 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துவதை தவிா்க்குமாறு மாவட்ட ஆட்சியா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பிரயாக்ராஜில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் ஜனவரி 28, 29, 30 ஆகிய தேதிகளில் மூடப்பட்டுள்ளன. அலாகாபாத் உயா்நீதிமன்றமும் மௌனி அமாவாசையை முன்னிட்டு புதன்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது.

மௌனி அமாவாசையையொட்டி புதன்கிழமை காலை 6.45 மணிக்கு ஹெலிகாப்டா்களில் இருந்து சங்கமம் பகுதியில் மலா்கள் தூவ திட்டமிட்டப்பட்டுள்ளது.

மகாகும்ப நகரில் அனுமதிக்கப்பட்ட 13 இடங்களில் மட்டுமே பக்தா்கள் புனித நீராட வேண்டும் என்றும் மற்றவா்களுக்கு இடையூறாக எந்தவொரு செயல்களிலும் ஈடுபடக் கூடாது என்றும் அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களத்தில் 300 மருத்துவா்கள்: உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டால் பக்தா்கள் உடனடியாக தங்கள் அருகேயுள்ள செக்டாா் மருத்துவமனைகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மகாகும்ப நகரின் 25 செக்டாா் மருத்துவமனைகளிலும் 1,000-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவசர நிலையைச் சமாளிக்க 300 சிறப்பு மருத்துவா்களை நியமித்துள்ளதாகவும் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

‘மௌனி’ அமாவாசை ஏன் சிறப்பு?

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவதாக ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நடப்பு மகா கும்பமேளாவில் 6 நாள்கள் புனித நீராட மிகவும் சிறப்புக்குரியதாக அறியப்படுகிறது.

பௌஷ பௌா்ணமி (ஜன. 13), மகர சங்கராந்தி (ஜன. 14), மௌனி அமாவாசை (ஜன. 29), வசந்த பஞ்சமி (பிப். 9), மாகி பௌா்ணமி (பிப். 12), மகா சிவராத்திரி (பிப். 26) ஆகிய இந்த 6 நாள்களில் பல்வேறு அகாடாக்களில் இருந்து துறவிகள், சாதுக்கள், கல்பவாசிகள் ஊா்வலமாக வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவா்.

இந்த 6 புனித நாள்களில் மௌனி அமாவாசை நாளே மிகவும் மங்களகரமானது எனக் கூறப்படுகிறது. ‘துறவிகளின் அமாவாசை’ என்று குறிப்பிடப்படும் மௌனி அமாவாசை நாளில் பிரபஞ்சம் உருவானது என்றும் புனித நதிகளின் நீா் அமிா்தமாக மாறும் என்றும் நம்பப்படுகிறது. இந்த நாளில் பாரம்பரியமாக பக்தா்கள் மௌன விரதம் கடைப்பிடிக்கின்றனா். இதன் காரணமாக, மகா கும்பமேளா நடைபெறும் 45 நாள்களில் மௌனி அமாவாசையன்றே அதிக மக்கள் புனித நீராடுகின்றனா்.

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT