தெரு நாய்கள் அதிகரிப்பு மற்றும் அதன் உடல்நலனைக் கருத்தில் கொண்டு தினந்தோறும் சிக்கன், முட்டை சாதம் வழங்கும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்துவரும் தெரு நாய் தொல்லைகள் நமது நாட்டில் புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமாகவும் உருவாகியிருக்கிறது நாய்க்கடிப் பிரச்சினை. இதில், அதிகமாக குழந்தைகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும் குணம் படைத்தவைகளாக உள்ளன. ஆனால், இந்த நாய்கள் மட்டும் ஏன் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது என்று தெரியுமா?
காட்டில் வாழ்ந்த ஆதிமனிதன் முதலில் நிலம் நோக்கி வரும் போது, தனக்கு பயன்படக்கூடிய தன்னால் அடக்கி ஆளக்கூடிய காட்டு விலங்குகளான ஆடு, மாடு உள்ளிட்ட விலங்குகளையும் சேர்த்து நாய்யையும் கூட்டிக்கொண்டே வந்தான்.
அவ்வாறு, வீட்டில் காவலுக்காக வெளியே இருந்த நாயினம் தற்போது வீட்டில் உள்ளேயே இருக்கும் வகையில் ஒரு உறுப்பினராகவே மாறியிருக்கிறது.
அந்த வகையில், தெருக்களில் சுற்றித்திரியும் ‘இண்டீஸ்’ என அழைக்கப்படும் இந்திய வகை நாய்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நாய்களுக்கு தினந்தோறும் சத்தான உணவளிக்க முடிவெடுத்திருக்கிறது பெங்களூரு நகராட்சி நிர்வாகம்.
புருஹத் பெங்களூரு மகாநகர பாலிகே (பெங்களூரு நகராட்சி) நாய்களுக்கு உணவளிக்கும் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நகரம் முழுவதும் 5,000 தெரு நாய்களுக்கு தினந்தோறும் சிக்கன் சாதம் வழங்க திட்டமிட்டுள்ளது. 367 கிராம் சிக்கன் சாதத்துக்கு, ஒரு நாய் வீதம் ரூ.22 செலவழிக்கும் திட்டத்துக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.2.88 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.
'குக்கிர் திகார்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்காக பெங்களூரு கிழக்கு, மேற்கு, தெற்கு, ஆர்ஆர் நகர், தாசரஹள்ளி, பொம்மனஹள்ளி, எலகங்கா மற்றும் மகாதேவபுரா ஆகிய எட்டு மண்டலங்களிலும் ஒரு மண்டலத்திற்கு 500 நாய்களுக்கு தினசரி உணவு சேவைகளை வழங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் எம்பி. கார்த்திக் சிதம்பரம் கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்துள்ளார். நாய்களுக்கு உணவளிப்பதன் மூலம் ரேபிஸ் தொற்று அதிகரிக்கவும் வாய்ப்புள்ளதாக விமர்சித்துள்ளார்.
இருப்பினும், உணவின்றி பரிதாபமாக பலியாகும் நாய்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு, தயாரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்துக்கு பல்வேறு விலங்கு நல ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.