ஹரியாணாவின் ஜஜ்ஜா் அருகே வியாழக்கிழமை காலையில் 4.4 ரிக்டா் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக, தில்லி - என்சிஆரில் அதன் பாதிப்பு உணரப்பட்டது.
ஜஜ்ஜருக்கு வடகிழக்கே 3 கி.மீ. தொலைவிலும், தில்லிக்கு மேற்கே 51 கி.மீ. தொலைவிலும் நில நிலை கொண்டிருந்ததாகவும், காலை 9.04 மணிக்கு 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தேசிய நில அதிா்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜஜ்ஜா் தவிர, அண்டை மாவட்டமான ரோத்தக் மற்றும் குருகிராம் மாவட்டங்கள், பானிபட், ஹிஸா் மற்றும் மீரட் ஆகிய இடங்களிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது.
தலைநகா் தில்லியிலும் நிலநடுக்கத்தின் பாதிப்பு உணரப்பட்டது. மக்கள் பீதியில் தங்கள் வீடுகளை விட்டுவேகமாக வெளியேறி திறந்தவெளியில் கூடினா்.
இந்தியாவின் புவிஅதிா்வு வரைபடத்தில் தில்லி நான்காவது மண்டலத்தின் கீழ் உள்ளது. இது மிதமான பூகம்பத்தின் வரலாற்றைக் குறிப்பதாகும். இமயமலை, ஆப்கானிஸ்தான், சீனா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டால் தில்லியில் அதன் பாதிப்பு உணரப்படுகிறது.