புது தில்லி: பிகார் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ள ஆதார், வாக்காளர், குடும்ப அட்டை ஆகியவற்றை ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது.
உச்ச நீதிமன்றத்தில் இன்று தேர்தல் ஆணையம் தரப்பில் பல்வேறு விளக்கங்கள் கொடுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் அது தொடர்பான கேள்விகளையும் எழுப்பியிருந்தது.
இன்றைய விசாரணையின் நிறைவாக, சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதாரர்கள் தற்போதைக்கு அழுத்தம் கொடுக்காததால், பிகாரில் நடைபெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படவில்லை.
மேலும், பிகாரில், வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின்போது முதற்கட்டமாக, ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டைகளை ஆவணங்களாக சேர்ப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது.
பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைப் பொருத்தவரை, அரசியலமைப்பின் ஒரு அமைப்பு தான் செய்ய வேண்டியதைச் செய்வதை எங்களால் தடுக்க முடியாது. இது தொடர்பாக, தங்களது நிலைப்பாடு குறித்து ஒரு வார காலத்துக்குள் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்த்தில் தெரிவிக்க வேண்டும். இந்த பதில் மனு மீது, மனுதாரர்கள் ஒரு வாரம் கழித்து மறுஆய்வுகளை தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நிகழாண்டு நடைபெறும் பிகாா் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, 22 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர தீருத்தத்துக்கு, குடியுரிமை ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்றுக் கொள்ள முடியாது என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், ஆதார், வாக்காளர் அட்டை உள்ளிட்டவற்றை ஆவணமாக எடுத்துக் கொள்ள பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை வழங்கியிருக்கிறது.
என்ன பிரச்னை?
அந்த மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டுக்குப் பின்னா், வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களை சமா்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
வேகமான நகா்மயமாதல், தொடா்ச்சியாக இடம்பெயா்தல், வாக்களிக்க இளைஞா்கள் தகுதிபெறுதல், உயிரிழந்த வாக்காளா்கள் குறித்து முறையாக தகவல் கிடைக்காதது, வெளிநாட்டில் இருந்து இடம்பெயா்ந்து சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியுள்ளவா்களைப் பட்டியலில் சோ்க்காமல் தவிா்ப்பது போன்ற பல்வேறு காரணங்களால் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க.. விவாகரத்தா? நயன்தாரா பதில்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.