மகாராஷ்டிரத்தில் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த 3,300-க்கும் அதிகமாக ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக, அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் ஒலி மாசுப்பாடுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக, அங்குள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 3,367 ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளதாக, முதல்வர் ஃபட்னவீஸ் இன்று (ஜூலை 11) சட்டப்பேரவையில் அறிவித்தார்.
இதில், மும்பை நகரத்தில் மட்டும் 1,608 ஒலிப்பெருக்கிகளை காவல் துறையினர் அகற்றியுள்ளதாகவும்; இதனால், மும்பையின் அனைத்து வழிபாட்டுத் தலங்களும் ஒலிப்பெருக்கிகள் இல்லாததாக மாறிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, உள்ளூர் காவல் துறையினர் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் மீண்டும் ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்படுவதைத் தவிர்க்க அவ்வப்போது சோதனைகளில் ஈடுபடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், யூர் வனப்பகுதிக்கு அருகில் அதிகரித்து வரும் அதிகப்படியான சத்தங்களினால், வனவிலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறிப்பிட்டு, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜிதேந்திர அவாத் கேள்வி எழுப்பியதாகக் கூறப்படுகிறது.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஃபட்னவீஸ், வனப்பகுதிகளுக்கு அருகில் இசை வாத்தியங்கள் மற்றும் ஒலிப்பெருக்கிகள் உறுதியாக அனுமதிக்கப்படாது என்றும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வனத் துறை மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.