சத்தீஸ்கர் மாநிலத்தின் அபூஜ்மாத் பகுதியில் இயங்கி வந்த 22 நக்சல்கள், நாரயணப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரிடம் இன்று (ஜூலை 11) சரணடைந்துள்ளனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த குதூல், நெல்நார், இந்திராவதி ஆகிய பகுதிகளின் பிரிவுகளில் இயங்கி வந்த நக்சல்கள், எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்தோ - திபெத்திய காவல் படையினரிடம் இன்று சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சரணடைந்த நக்சல்கள் 22 பேரையும் பிடிக்க ஏற்கனவே வெகுமதிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. இதில், மன்கு குஞ்சம் (வயது 33) என்பவரை பிடிக்க ரூ.8 லட்சம் வெகுமதியும், ஹித்மே குஞ்சம் (28), புன்னா லால் (26) மற்றும் சனிராம் கொர்ரம் (25) ஆகியோரை பிடிக்க தலா ரூ.5 லட்சம் வெகுமதியும் அறிவிக்கப்பட்டிருந்தன.
இத்துடன், சரணடைந்த 11 பேரை பிடிக்க தலா ரூ.1 லட்சமும், மீதமுள்ள 7 பேரை பிடிக்க தலா ரூ.50,000 வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தன.
தற்போது சரணடைந்தவர்கள் அனைவரின் மீதும் விதிக்கப்பட்டிருந்த வெகுமதிகளின் மொத்த மதிப்பானது ரூ.37.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. மேலும், சரணடைந்த நக்சல்களில் ஒரு தம்பதி உள்பட 8 பெண்கள் மற்றும் 14 ஆண்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சரணடைந்த நக்சல்கள் அனைவருக்கும் அரசுத் திட்டத்தின்படி ரூ.50,000 வழங்கப்பட்டு, அவர்களது மறுவாழ்விற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, வரும் 2026-ம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள், நாட்டிலுள்ள அனைத்து நக்சல்களும் அழிக்கப்படுவார்கள் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மதச்சார்பின்மை, சோசலிசத்தை தவிர்க்க பாஜக முயற்சி: கார்கே
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.