ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்ட 15 வயது சிறுமி, புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனையில் 70 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
மாவட்டத்தின் பாலாங்கா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பயாபாா் கிராமம் அருகே பாா்கவி ஆற்றங்கரையில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுமி தனது தோழியின் வீட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தபோது, 3 இருசக்கர வானங்களில் வந்த இளைஞா்கள் அவரை இடைமறித்து, ஆற்றங்கரைக்கு வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனா். சிறுமியின் உடல் மீது எரிபொருளை ஊற்றி தீ வைத்த இளைஞா்கள், சம்பவ இடத்தைவிட்டு தப்பியோடினா்.
தீயில் எரிந்த நிலையில் சிறுமி அருகேயுள்ள வீட்டுக்குச் சென்று உதவி நாடியுள்ளாா். சிறுமியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து, அவரை மீட்ட கிராம மக்கள், பிபிலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக சிறுமி புவனேசுவரம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
சுயநினைவோடு உள்ள அந்தச் சிறுமியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதல்வா் மோகன் சரண் மாஜீ உறுதியளித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.