ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென குடியரசு துணைத் தலைவர் தன்கருக்கு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக தீடிரென நேற்று அறிவித்தார். மேலும், மருத்துவர்கள் ஆலோசனைப்படி, பரிசோதனை செய்துகொண்டு ஓய்வெடுக்க வேண்டியுள்ளதால், பதவியை ராஜிநாமா செய்வதாக, ராஜிநாமாவுக்கான உரிய விளக்கத்துடன் குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தார்.
இந்த நிலையில், குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், தன்னுடைய ராஜிநாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவை அவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் திடீரென ராஜிநாமா செய்திருப்பது விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ச்சியளிக்கிறது.
இன்று (அதாவது நேற்று - ஜூலை 21) மாலை 5 மணி வரை பல எம்பிக்களுடன் நானும் அவருடன் இருந்தேன். இரவு 7.30 மணிக்கு அவருடன் தொலைபேசியில் பேசினேன்.
ஜகதீப் தன்கர் அவருடைய உடல்நலத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதில், எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், திடீரென ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். இருப்பினும், இது யூகங்களுக்கான நேரம் அல்ல.
தன்கர் ஆளும் கட்சியையும் எதிர்க்கட்சியையும் சமமாக நடத்தினார். நாளை மதியம் 1 மணியளவில் வணிக ஆலோசனைக் குழு கூட்டத்துக்கும் திட்டமிட்டிருந்தார். நீதித்துறை தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளையும் நாளை(அதாவது இன்று - ஜூலை 22) வெளியிடவிருந்தார்.
அவர் நலமுடன் இருக்க வாழ்த்துகிறோம். மேலும், அவர் தன்னுடைய ராஜிநாமா முடிவை பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரதமரும் தன்கரிடம் கூறி முடிவை மாற்றுவார் என நம்புகிறோம். நாடு விரும்புவதும் அதுதான்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : பாஜக விழுங்குவதற்கு பழனிசாமி ஒன்றும் புழுவல்ல: இபிஎஸ் பேச்சு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.