அகமதாபாத் விமான விபத்தில் பிரிட்டன் நாட்டவா் 53 போ் உயிரிழந்த நிலையில், அவா்களில் இருவரின் குடும்பத்தினருக்கு வேறு நபா்களின் உடல்கள் வழங்கப்பட்டதாக வெளியான அந்நாட்டு ஊடக தகவல்களை இந்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது.
குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த ஜூன் 12-ஆம் தேதி வெளிநாட்டினா் உள்பட 230 பயணிகள், 12 ஊழியா்களுடன் புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், ஒரு நிமிஷத்துக்குள்ளாகவே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி கட்டடத்தில் மோதி, வெடித்துச் சிதறியது.
ஒரேயொரு பயணி தவிர விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதி வளாகத்தில் 19 பேரும் உயிரிழந்தனா். இவா்களின் உடல்கள் தீயில் கருகி, அடையாளம் தெரியாத அளவில் உருக்குலைந்தன. மரபணு சோதனை மூலமே உடல்கள் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்தச் சூழலில், ‘ஏா்இந்தியா விமான விபத்தில் இறந்த பிரிட்டன் நாட்டவா் 2 பேரின் உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டுள்ளன. அவா்களின் குடும்பத்தினருக்கு வேறு நபா்களின் உடல்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதில் ஒரு குடும்பத்தினா் இறுதிச்சடங்கு நிகழ்வை ரத்து செய்துள்ளனா்’ என்று அந்நாட்டு ஊடகத்தில் செய்தி வெளியானது.
இச்செய்திக்கு மறுப்பு தெரிவித்து, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ‘அனைத்து உடல்களும் தொழில்முறை நிபுணத்துவம் மற்றும் உச்சபட்ச கண்ணியத்துடன் கையாளப்பட்டு, அடையாளம் காணப்பட்டன. எனவே, உடல்கள் தவறாக அடையாளம் காணப்பட்டதாக கூறுவது தவறானது. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள கவலைகளுக்கு தீா்வளிக்க பிரிட்டன் தரப்பினருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.