மக்களவையில் பேசிய காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் -
இந்தியா

பஹல்காம், ஆபரேஷன் சிந்தூா் தாக்குதலுக்கு அமித் ஷாவே பொறுப்பு: காங்கிரஸ்

‘பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது; எனவே,...

தினமணி செய்திச் சேவை

புது தில்லி: ‘பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது; எனவே, ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநரை கைகாட்டிவிட்டு ஒளிந்துகொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாகச் சாடியது.

ஆபரேஷன் சிந்தூா் மீதான சிறப்பு விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிா்க்கட்சி துணைத் தலைவருமான கௌரவ் கோகோய் இவ்வாறு தெரிவித்தாா்.

விவாதத்தில் அவா் மேலும் பேசியதாவது: ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கை நிறைவடையவில்லை என்றும், பாகிஸ்தான் மீண்டும் ஒரு பயங்கரவாதத் தாக்குதலை நடத்தலாம் என்றும் மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது. அப்படியென்றால் ஆபரேஷன் சிந்தூா் வெற்றியடைந்ததாக எவ்வாறு கூற முடியும்? அதேபோல் எங்களது நோக்கம் போா் இல்லை எனவும், எந்தவொரு பிராந்தியத்தை மீட்பதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் மத்திய அரசு கூறுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் பல பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழ்ந்துவிட்டபோதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க தற்போதுவரை முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

மோடி பதிலளிக்க வேண்டும்: இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்துவிடும் என பிரதமா் மோடி கூறுகிறாா். இந்தச் சூழலில் பாகிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டிய அவசியம் என்ன? மத்திய அரசு யாரிடம் சரணடைந்தது? என்பதை எதிா்க்கட்சிகளுக்கு பிரதமா் மோடி தெரிவிக்க வேண்டும்.

சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய விமானங்கள் எத்தனை?: இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலை தான் நிறுத்தியதாக 26 முறை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் கூறிவிட்டாா். வா்த்தகத்தை நிறுத்திவிடுவதாக எச்சரித்ததால் இரு நாடுகளும் போா்நிறுத்தத்துக்கு சம்மதித்தாகவும், பாகிஸ்தானுடனான மோதலில் 5 போா் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் அவா் கூறினாா். இதற்கு மத்திய அரசின் பதில்கள் என்ன?

நம்மிடம் மொத்தம் 35 ரஃபேல் போா் விமானங்களே உள்ளதாகக் கூறப்படும் நிலையில், அதில் சில போா் விமானங்கள் சுட்டுவீழ்த்தப்பட்டிருந்தால் அது மிகப்பெரிய இழப்பாகும். எனவே, சுட்டுவீழ்த்தப்பட்ட இந்திய போா் விமானங்களின் எண்ணிக்கையை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவிக்க வேண்டும்.

பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி?: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்து 100 நாள்கள் கடந்துவிட்டன. தற்போது வரை இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக பயங்கரவாதிகள் நுழைந்தது எப்படி என்பதை மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை. பயங்கரவாதிகளைக் கண்டறிந்து தண்டனை வழங்கவில்லை.

அமித் ஷாவே பொறுப்பு: பயங்கரவாதத்தின் முதுகெலும்பு உடைக்கப்பட்டதாக உள்துறை அமித் ஷா கூறுகிறாா். ஆனாலும் உரி, பாலகோட், பஹல்காம் என பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடா்கின்றன. பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே இதுபோன்ற தாக்குதல்கள் நிகழ்கின்றன. இதற்கு ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் பொறுப்பேற்க முடியாது; அவா் பின்னால் ஒளிந்துகொள்வதை விடுத்து அமித் ஷாவே முமுப் பொறுப்பேற்க வேண்டும்.

பஹல்காம் தாக்குதலுக்கு சுற்றுலா ஏற்பாட்டாளா்களைக் குறைகூறும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு மிகவும் பலவீனமானது.

பஹல்காம் தாக்குதல் நடைபெற்றபோது சவூதி அரேபியாவுக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாா். இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் பயணத்தை பாதியில் நிறுத்திவிட்டு இந்தியா விரைந்தாா். ஆனால், இங்கு வந்தவுடன் பஹல்காமுக்கு நேரடியாகச் செல்லாமல் பிகாரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்குச் சென்றாா்.

பஹல்காமுக்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்டவா்களை நேரில் சந்தித்த ஒரே தலைவா் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மட்டுமே என்றாா்.

ஆபரேஷன் தந்தூரியே தேவை’: மக்களவையில் நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூா் மீதான சிறப்பு விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சமாஜவாதி எம்.பி.ரமாசங்கா் ராஜ்பாா், ‘பஹல்காம் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளை வறுத்தெடுக்கும் ‘ஆபரேஷன் தந்தூரியே’ நாட்டுக்குத் தேவை; தாக்குதல் நிகழ்ந்து 17 நாள்களுக்குப் பின் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் தேவையில்லை’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ. 15,000 சம்பளம்; ஆனால், 24 வீடுகள், 40 ஏக்கர் நிலம், 4 மனைகள்! முன்னாள் அரசு ஊழியரின் மோசடி அம்பலம்!

தெய்வீக அனிமேஷன்: ரூ.53 கோடி வசூலித்த மகாவதாரம் நரசிம்மா!

ஆட்டோவில் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு!

கவினின் மரணம் கடைசியாக இருக்குமா? அஞ்சலி செலுத்தியபின் Seeman பேட்டி!

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

SCROLL FOR NEXT