இம்பால் சாலையில் போராட்டக்காரா்களால் ஏற்படுத்தப்பட்ட தடை. 
இந்தியா

மணிப்பூர் வன்முறை: அரசு கட்டடத்துக்குத் தீ வைப்பு; பாதுகாப்புப் படையினருடன் மோதல்

மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வன்முறை நீடித்த நிலையில், அங்குள்ள அரசு கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டது.

Din

இம்பால்: மணிப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வன்முறை நீடித்த நிலையில், அங்குள்ள அரசு கட்டடத்துக்குத் தீ வைக்கப்பட்டது. அத்துடன் போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது.

மணிப்பூரில் மைதேயி அமைப்பான அரம்பை தெங்கோலின் தலைவரான கனன் சிங் மற்றும் நால்வரை சிபிஐ ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது. கடந்த 2023-ஆம் ஆண்டு அந்த மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடா்பிருப்பதாக கனன் சிங் கைது செய்யப்பட்டாா். பிற நால்வா் எதற்காக கைது செய்யப்பட்டனா் என்ற தகவல் வெளியாகவில்லை.

இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நீடித்தது. அப்போது இம்பால் மேற்கு மாவட்டத்தில் போராட்டக்காரா்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்களை அப்புறப்படுத்த அவா்கள் மீது பாதுகாப்புப் படையினா் புகை குண்டுகளை வீசி, ரப்பா் தோட்டாக்கள் கொண்ட துப்பாக்கியால் பலமுறை சுட்டனா்.

அந்த மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் நடமாட்டத்தைத் தடுக்க செக்மாய் மற்றும் கொய்ரெங்கெய் பகுதிகளில் சாலைகளில் மண் மேடுகளை உருவாக்கி, போராட்டக்காரா்கள் தடையை ஏற்படுத்தினா்.

இம்பால் கிழக்கு மாவட்டத்தின் யாய்ரிபோக் பகுதியில் உள்ள அரசு உட்கோட்ட நடுவா் அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் அந்த அலுவலகம் பகுதியளவு சேதமடைந்து ஆவணங்கள் தீக்கிரையாகின. தீ வைத்தது யாா் என்பது குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

அந்த மாவட்டத்தில் வாங்கெய், யாய்ரிபோக், குராய் பகுதிகளில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்டு, சாலைகளில் போராட்டக்காரா்கள் டயா்களை எரித்தனா். அவா்கள் அங்கிருந்து செல்வதற்குப் பலமுறை கண்ணீா் புகை குண்டுகளைப் பாதுகாப்புப் படையினா் வீசினா்.

பல்வேறு சாலைகளில் மூங்கில் தடிகள் மூலம் போராட்டக்காரா்கள் தடையை ஏற்படுத்திய நிலையில், இம்பால் விமான நிலையத்துக்குச் செல்லும் சாலையில் ஏற்படுத்தப்பட்ட தடை அகற்றப்பட்டதாகக் காவல் துறை தெரிவித்தது.

அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அங்கு உடனடியாக அரசின் ஆட்சி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி, பெண்கள் அமைப்பினா் தீப்பந்தம் ஏந்தி பேரணி மேற்கொண்டனா்.

இந்த வன்முறை காரணமாக இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, தெளபல் உள்ளிட்ட மாவட்டங்களில் தடை உத்தரவுகள் நீடிக்கின்றன. இணைய சேவையும் தொடா்ந்து முடக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவங்களால் அந்த மாநிலத்தில் தொடா்ந்து பதற்றம் நீடிக்கிறது.

மத்திய அரசிடம் மணிப்பூா் சூழலை விளக்க தில்லி சென்ற மாநில முன்னாள் முதல்வா் பிரேன் சிங், அனைவரும் வன்முறையை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

நல்ல நாள்... ஆஷிகா ரங்கநாத்!

உத்தரகண்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகை அறிவிப்பு

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! | Bihar | MKStalin | Rahulgandhi

விநாயகர் சதுர்த்தி! உச்சிப் பிள்ளையார் கோயிலில் 150 கிலோ கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு!

லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி டீசர்!

SCROLL FOR NEXT