உத்தரகண்டில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் சேவை இயக்க நிறுவனமாக ஆர்யன் ஏவியேஷன் தனியார் நிறுவனம் அலட்சியமாகச் செயல்பட்டதாகக் கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கேதார்நாத் கோயில் அருகே கௌரிகுண்ட் வனப்பகுதியில் தனியார் நிறுவன ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை விழுந்து நொறுங்கித் தீப்பற்றியது. இந்தக் கோர விபத்தில் 2 வயதுக் குழந்தை உள்பட 5 பக்தர்கள், பைலட், பத்ரிநாத்-கேதார்நாத் கோயில் அறக்கட்டளை உறுப்பினர் என 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான பெல் 407 ரக ஹெலிகாப்டர் ஆர்யன் ஏவியேஷன் என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதன் பொறுப்பு மேலாளர் கௌசிக் பதக் மற்றும் மேலாளர் விகாஸ் தோமர் மீது சோன்பிரயாக் காவல் நிலையத்தில் பிஎஸ்பி மற்றும் விமானச் சட்டம் 1934இன் பிரிவு 10இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இமயமலை கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமான பாட்டாவில் உள்ள வருவாய் காவல் துணை ஆய்வாளர் ராஜீவ் நகோலியா அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் 15ஆம் தேதி காலை 6 மணி முதல் 7 மணி வரை ஹெலிகாப்டர் நடவடிக்கைகளுக்காக ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்டதாகவும், இந்த விபத்து அதற்கு முன்பு காலை 5.30 மணிக்கு நடந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
மேலும், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாகவும், மூடுபனியாகவும் இருந்தபோதிலும், ஹெலிகாப்டர் இயக்கப்படுவதற்கு முன்பு வானிலை நிலைமைகள் சரிபார்க்கப்படவில்லை. இவ்வாறு செய்வது உயிர் இழப்பை ஏற்படுத்தும் என்பதை நிறுவன மேலாளர்கள் நன்கு அறிந்திருந்ததாகவும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆர்யன் ஏவியேஷன் தனியார் நிறுவனம் மற்றும் அதன் மேலாளர்கள் தங்கள் பொறுப்புகளில் பெரும் அலட்சியத்தைக் காட்டினர். இதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக புகாரில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.