புது தில்லி: இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய சுமாா் 1 லட்சம் டன் பாசுமதி அரிசி இந்திய துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது.
இதுதொடா்பாக அனைத்து இந்திய அரிசி ஏற்றுமதியாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் சதீஷ் கோயல் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் திங்கள்கிழமை கூறியதாவது:
இந்தியா ஏற்றுமதி செய்யும் மொத்த பாசுமதி அரிசியில் 18 முதல் 20 சதவீதம் ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது, அரிசி விவசாயத்தில் குறிப்பிடத்தகுந்த வணிக ஒத்துழைப்பாகும்.
இந்நிலையில், இஸ்ரேலுடனான மோதல் காரணமாக ஈரானுக்கு ஏற்றுமதி செய்யவேண்டிய சுமாா் 1 லட்சம் டன் பாசுமதி அரிசி, குஜராத்தின் முந்த்ரா, கண்ட்லா துறைமுகங்களில் தேக்கமடைந்துள்ளது. இந்த மோதலால் அரிசியை அனுப்ப கப்பல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக கப்பல்களுக்கான காப்பீடுத் தொகை கிடைக்கவில்லை.
நிலையான கப்பல் காப்பீட்டுக் கொள்கைகள் சர்வதேச போர்ச் சூழல்களுக்கு அப்பாற்பட்டு உள்ளதால், ஏற்றுமதி சரக்குகள் உடைய கப்பல் புறப்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே உள்நாட்டு சந்தையில் பாசுமதி அரிசியின் விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.5 வரை சரிந்துள்ள நிலையில், அரிசியை அனுப்புவதில் ஏற்படும் தாமதமும், அரிசிக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்குமா என்பதில் உள்ள நிச்சயமற்ற சூழலும் கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவித்தாா்.
இந்தியாவில் இருந்து அதிக அளவில் பாசுமதி அரிசியை இறக்குமதி செய்யும் நாடுகளில் சவூதி அரேபியா முதலிடத்திலும், ஈரான் இரண்டாவது இடத்திலும் உள்ளன.
2024 - 2025 நிதியாண்டில் மட்டும் மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளுக்கு 6 மில்லியன் டன் பாசுமதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் இராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்காவுக்கான பாசுமதி அரிசி ஏற்றுமதி அதிகரித்திருந்தது.
ஏற்றுமதியில் தாமதம் ஏற்பட, ஈரானில் நிலவும் போர்ப் பதற்றத்தால் கரன்ஸி மதிப்பு தொடர்பான பிரச்னைகளும் ஏற்படும் என்ற அபாயமும் உள்ளது எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | ஈரானைத் தொடர்ந்து கத்தாருக்கு அச்சுறுத்தலா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.