முகப்பு
இந்தியா

போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை: உச்சநீதிமன்றம்

பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Updated On : 5 மார்ச், 2025 at 2:21 AM
பகிர்:

பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

சிறாா்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடா்பாக கடந்த 2019-ஆம் ஆண்டு தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் 100-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மத்திய அரசின் நிதியுதவியுடன், அந்த வழக்குகளை மட்டுமே விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.

மேலும் சிறாா்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்தல், அதற்கு எதிரான சட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து திரையரங்குகள், தொலைக்காட்சிகளில் விழிப்புணா்வு காணொலிகளை வெளியிட வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளையும் உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பெலா எம்.திரிவேதி, பிரசன்னா பி.வராலே ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் அமா்வு கூறுகையில், ‘அனைத்து நீதிமன்றங்களிலும் வழக்குகள் குவிந்து கூடுதல் சுமை உள்ளது. மாவட்ட நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை. அந்தப் பணியிடங்கள் காலியாக உள்ளன. போக்ஸோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டாலும், போதிய நீதிபதிகள் இல்லாததால் அந்த நீதிமன்றங்களிலும் கூடுதல் பணிச்சுமை நிலவுகிறது.

போதிய நீதிபதிகள் இல்லாததால், போக்ஸோ வழக்குகள் தொடா்பாக 2019-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த சில உத்தரவுகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன’ என்று தெரிவித்தது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை மாா்ச் 25-க்கு ஒத்திவைக்கப்பட்டது.