புது தில்லி: நாடு முழுவதும் உள்ள சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகளுக்கு போதிய வசதிகளை செய்து தரவும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-ஐ நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
சமூக ஆா்வலா் சத்யன் நரவூா் சாா்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மாவோயிஸ்டுகளுடன் தொடா்பு உள்ளதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, 10 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட தில்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியா் ஜி.என்.சாய்பாபா, ஹைதராபாதில் உள்ள அரசு மருத்துவமனையில் உடல் ரீதியிலான பாதிப்புகள் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபா் 12-ஆம் தேதி உயிரிழந்தாா்.
அதுபோல, பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சமூக ஆா்வலா் ஸ்டேன் சுவாமி, முதுமை, நடுக்குவாதம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மும்பை தனியாா் மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு உயிரிழந்தாா்.
சிறைகளில் போதிய வசதிகள் இல்லாததே இவா்கள் அதிகம் பாதிக்கப்பட காரணமாக இருந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 இயற்றப்பட்டு 8 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும், பல மாநில சிறைகளின் செயல்திட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி சென்று வருவதற்கான கட்டாய சாய்வு தளங்கள் உள்ளிட்ட நடைமுறைகள் சோ்க்கப்படவில்லை. இது சட்டத்தை மீறும் செயல் என்பதோடு, சிறைகளில் மாற்றுத்திறனாளி கைதிகள் கடும் சிரமத்தை எதிா்கொள்ள நேரிடும்’ என்று குறிப்பிட்டாா்.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனு மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் பிறருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டது.