நாக்பூர் கலவரத்தில் தொடர்புடையதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் காவல் துறையில் சரணடைந்துள்ளனர்.
சமீபத்தில் சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த ஃபஹிம் கான் என்பவரை காவல் துறையினர் கைது செய்து மார்ச் 21 வரை காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சரண் அடைந்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தின் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
ஒளரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வலியுறுத்தி மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில், விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் திங்கள்கிழமை (மார்ச் 17) இரவு 7.30 மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் சிறுபான்மை சமூகத்தின் புனித நூல் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியது. இதற்கு மற்றொரு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் இரு அமைப்புகளுக்கு இடையிலான மோதல் வன்முறையாக மாறியது.
இதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார்களுக்கு தீயிட்டு எரிக்கப்பட்டது. இதனைத் தடுக்க வந்த காவல் துறையினர் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதால், அவர்களை தடியடி நடத்தி காவல் துறையினர் கலைத்தனர். இதில், காவலர்கள் உள்பட பலர் படுகாயம் அடைந்தனர்.
பின்னா், இரவு 10.30 மணியளவில், நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் மோதல் வெடித்தது. அங்கு பொதுமக்களின் வீடுகள் மற்றும் ஒரு மருத்துவமனையைச் சூறையாடிய வன்முறை கும்பல், வீடுகளுக்கு வெளியே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டு எரித்தனர்.
பலர் காயம் - 50 பேர் மீது வழக்கு
இந்த வன்முறை சம்பவங்களில் 3 துணை ஆணையர்கள் உள்பட 33 போலீஸார், பொதுமக்கள் பலர் காயமடைந்தனா். இதுகுறித்து நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 50-க்கும் மேற்பட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த கலவரத்தைத் தூண்டுவதற்கு பின்னணியில் செயல்பட்டதாக சிறுபான்மை கட்சியைச் சேர்ந்த பஹீம் கான் என்பவரை நாக்பூர் காவல் துறையினர் இன்று காலை கைது செய்தனர்.
இதனிடையே, ஒளரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும் விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 8 பேர் கோத்வாலி நகர காவல் துறையில் சரணடைந்துள்ளனர். அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிக்க | கரோனாவுக்குப் பிறகு பங்குச் சந்தையில் அதிக சரிவு கண்ட நாடுகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.