மனைவி பிறந்தநாளுக்கு ஆச்சரியம் கொடுப்பதற்காக லண்டனிலிருந்து சொந்த ஊரான மீரட் திரும்பிய முன்னாள் கடற்படை வீரர் சௌரவ் ராஜ்புத் கொலை செய்யப்பட்டார்.
ஊர் திரும்பிய சௌரவ் சில நாள்களில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவரது மனைவி ஆண் நண்பருடன் சேர்ந்து சௌரவ்வைக் கொலை செய்தது தெரிய வந்தது.
கடந்த 2016ஆம் ஆண்டு சௌரவ் - முஸ்கான் திருமணம் நடந்து, 2019ல் மகள் பிறந்துள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு லண்டனில் வேலை கிடைத்து சௌரவ் சென்றுள்ளார். முஸ்கானுடன் பள்ளியில் படித்த சாஹிலுடன் நட்பு வளர்ந்திருக்கிறது. இந்த நிலையில்தான் இந்தக் கொலைச் சம்பவம் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுவும், சௌரவ் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் காவல்நிலையத்துக்கு அளித்த புகாரின் பேரில், விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டில் சோதனையிட்டபோது, ஒரு நீல டிரம்பில், சிமெண்ட்டுக்குள் சௌரவ் உடல் புதைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், மார்ச் 4ஆம் தேதி கொலை செய்யப்பட்டுள்ளார். சௌரவ் உடல், கடந்த இரண்டு வாரங்களாக வீட்டில் இருந்த பிளாஸ்டிக் டிரம்முக்குள் புதைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது.
சௌரவ்வின் மனைவி முஸ்கான், கணவரைக் கொல்ல கடந்த நவம்பர் மாதம் முதல் திட்டம் தீட்டி வந்துள்ளார். தனது நண்பருடன் சேர்ந்து, கணவருக்கு போதை மருந்து கொடுத்து பிறகு கொலை செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனைவியிடம் நடத்திய விசாரணையில், பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி சௌரவ் லண்டனிலிருந்து வந்துள்ளார். முஸ்கானும், அவரது நண்பர் சாஹில் ஷுக்லாவும் சேர்ந்து, சௌரவுக்கு போதைப் பொருளைக் கொடுத்துள்ளனர். அவர் உறங்கியதும் முஸ்கான் கத்தியால் சௌரவ்வைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். உடலை பல துண்டுகளாக வெட்டியும் உள்ளனர்.
அடுத்தநாள் காலை 50 கிலோ சிமெண்ட் வாங்கிவந்து, பிளாஸ்டிக் டிரம்புக்குள் சிமெண்ட் கலவையைக் கொட்டி அதற்குள் சௌரவ் உடல்பாகங்களை வைத்து மூடியிருக்கிறார்கள்.
பிறகு இருவரும் ஷிம்லா சென்றுவிட்டனர். மார்ச் 17ஆம் தேதி இருவரும் வீடு திரும்பியபோது கைது செய்யப்பட்டனர். தனது குற்றத்தை முஸ்கான் காவல்நிலையத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.