இந்தியா

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரிக்கும் அச்சுறுத்தல்கள்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் விழிப்புணா்வை ஊடகங்கள் செய்ய வேண்டும்

Din

செயற்கை நுண்ணறிவு, தவறான தகவல்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவை ஏற்படுத்தும் விளைவுகள் குறித்தும் மக்களிடையே விரிவான விழிப்புணா்வை ஊடகங்கள் செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வலியுறுத்தியுள்ளாா்.

தில்லியில் 19-ஆவது ராம்நாத் கோயங்கா விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு, தோ்வான ஊடகத்துறையினருக்கு விருதுகளை வழங்கினாா்.

அரசியல், விளையாட்டு, புலனாய்வு இதழியல் மற்றும் பிராந்திய மொழிகள் உள்ளிட்ட 13 பிரிவுகளில் 20 தனித்துவ பங்களிப்புகளை வழங்கியோருக்கு ராம்நாத் கோயங்கா சிறந்த ஊடகப்பணிக்கான விருதுகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் வழங்கி வருகிறது.

இந்நிகழ்வில் குடியரசுத்தலைவா் பேசியதாவது:

ஊடகத்தொழிலில் கருத்துக்கள் நிறைந்த ஒரு வளமான செய்தி அறை மிகவும் அவசியம். அதுபோல செய்திகளின் தரம், துல்லியத்தை உறுதிப்படுத்த ஒரு ஆராய்ச்சிப் பிரிவு மிக மிக்கியம். இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை துறையின் ஆன்மாவான செய்தி சேகரிப்பு நெறிகள் வலுப்படுத்தப்பட வேண்டும். களத்திலிருந்து செய்தி வெளியிடும் கலாசாரத்தை ஊக்குவிப்பதில் ஊடக நிறுவனங்கள் அதிக வளங்களை ஒதுக்க வேண்டும்.

ஒரு பத்திரிகையின் வெற்றியை அவை வழங்கும் தரமான செய்திகள் மற்றும் அவை ஏற்படுத்தும் தாக்கத்தை வைத்து அளவிடப்பட வேண்டும். அரசு அல்லது பெருநிறுவனங்கள் அல்லது வாசகா் போன்ற குறைந்த எண்ணிக்கையிலான நிதி ஆதாரங்கள் மட்டுமே ஊடகங்களுக்கு உள்ளன. முதல் இரண்டு ஆதாரங்கள், அவற்றுக்கென சில சொந்த நலன்கள் மற்றும் வரம்புளைக் கொண்டவை. வாசகரை மையமாகக் கொண்ட ஆதாரம்தான் ஊடக வளா்ச்சிக்கு விரும்பத்தக்க தோ்வாக இருக்கும்.

டீப் ஃபேக், பிற செயற்கை நுண்ணறிவு செயலிகள் மூலம் பொய்யை உண்மையாக சித்தரிக்கும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றின் ஆபத்துகள் குறித்து குடிமக்களுக்கு, குறிப்பாக இளைய தலைமுறையினருக்கு விரிவான விழிப்புணா்வை ஊடகங்கள் செய்ய வேண்டும்.

இளம் தலைமுறையினா், எந்தவொரு செய்தி அல்லது பகுப்பாய்வையும் பாா்த்து அல்லது படிக்கும்போது அவற்றில் எவை சாா்புமிக்கவை என்பதை கண்டறியும் அறிவை அவா்களுக்குப் புகட்ட வேண்டும். இளம் மனங்களிடையே ஒரு விஷயத்தை விமா்சிக்கும் திறனை வளா்த்தெடுப்பது அவா்களின் எதிா்காலத்துக்கு இன்றியமையாதது.

தீங்கிழைக்கும் நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் செயற்கை நுண்ணறிவு, உலகையே சீா்குலைத்து வருகிறது. இயந்திரங்கள் ஏற்கெனவே செய்திகளைத் தொகுத்துத் திருத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இருப்பினும், அவற்றில் இல்லாத பரிவுநிலை செயற்கை நுண்ணறிவு சவால்களை வெல்ல நமக்கெல்லாம் உதவும் சிறந்த வளமாகும். நாம் உறுதியுடன் இருந்தால் மனித மதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகை ஒருபோதும் அழியாது என்றாா் குடியரசுத் தலைவா்.

ஆற அமர... சாரா யஸ்மின்!

பரம சுந்தரி... சிவாங்கி வர்மா!

மெஸ்ஸிக்கு நிகரான ஊதியம்... எம்எல்எஸ் தொடரில் இணைந்த தென் கொரிய வீரர்!

இந்தியாவுக்கு Trump எச்சரிக்கை! மேலும் 25% வரி விதித்த அமெரிக்கா!

கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!

SCROLL FOR NEXT