கர்நாடக சட்டப்பேரவையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முஸ்லிம்களுக்கு அரசு ஒப்பந்தங்களில் 4% இடஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய பாஜகவினர் பேரவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று அவர்மீது காகிதங்களை வீசி எறிந்தனர்.
இடைநீக்க உத்தரவை மாநில சட்டம் மற்றும் சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டீல் முன்மொழிய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த இடைநீக்க உத்தரவை வெளியிட்ட பேரவைத் தலைவர், “இந்தச் சம்பவம் மிகுந்த வேதனையை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் இருக்கை அல்ல. இது ஜனநாயகம், உண்மை, நீதியின் சின்னம். இந்த இருக்கையில் அமர்ந்து பேசுவது பெருமைமிகுந்த ஒன்றாகும்.
ஒவ்வொரு உறுப்பினரும் இந்த இருக்கையின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாக்க வேண்டும். நாம் யாரும் இந்த இருக்கையை விட உயர்ந்தவர்கள் அல்ல. நமது தனிப்பட்ட உணர்வுகள் இந்த இருக்கையின் கண்ணியத்தை விட உயர்ந்ததாக இருக்கக்கூடாது.
நாம் அர்ப்பணிப்புடன், அமைதியாகவும், நாகரிகமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இந்தச் சம்பவம் நமக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இனிவரும் காலங்களில் அரசியலமைப்பையும் இந்த இருக்கையின் புனிதத்தையும் மதிப்போம்.
சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிப்பதையும், பேரவைத் தலைவரின் கண்ணியத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதையும், அவையின் மரபுகளுக்கு சேதம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதையும் பொறுத்துக்கொள்ள முடியாது” எனத் தெரிவித்தார்.
இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் அவையை விட்டு வெளியேற மறுத்ததைத் தொடர்ந்து அனைவரும் பாதுகாவலர்களால் வெளியே தூக்கிச் செல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.