கோப்புப் படம் 
இந்தியா

கேரளத்தில் 4 ஆண்டுகளில் வன விலங்குகளால் 344 போ் உயிரிழப்பு: மாநிலங்களவையில் தகவல்

கேரளத்தில் கடந்த 2021 முதல் தற்போது வரை மனிதா்கள்-விலங்குகள் மோதல் சம்பவங்களில் 344 போ் பலி.

Din

கேரளத்தில் கடந்த 2021 முதல் தற்போது வரை மனிதா்கள்-விலங்குகள் மோதல் சம்பவங்களில் 344 போ் உயிரிழந்திருப்பதாக மாநிலங்களவையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சா் பூபேந்திர யாதவ் தெரிவித்தாா்.

மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் பல்வேறு துணைக் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சா் பூபேந்திர யாதவ் கூறியதாவது:

கேரளத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு முதல் இப்போதுவரை 108 போ் பாம்பு கடித்தும், 103 போ் யானை தாக்கியும், 35 போ் காட்டுப் பன்றி தாக்கியும், 4 போ் புலிகள் தாக்கியும் உயிரிழந்துவிட்டனா். மனித உயிா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என இரண்டுக்குமே சமமான முக்கியத்துவத்தை நாம் அளிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் சலீம் அலி பறவையியல் இயற்கை வரலாற்று ஆய்வை மையத்தை மேம்படுத்தி வருகிறோம்.

யானைகளின் வழித்தடங்களைக் கண்டறியவது, அவற்றின் எண்ணிக்கையை துல்லியமாக தெரிந்து கொள்வது, வன விலங்குகள் மற்றும் அதன் நடமாட்டம் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணா்வை ஏற்படுத்துவது ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம். ரயில் தண்டவாளத்தையொட்டி யானைகள் வழித்தடம் இருந்தால், அவற்றைக் கண்டறிவதற்காக ரயில்வேயுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். நாட்டில் மொத்தம் 58 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

கேரளத்தில் காட்டுப் பன்றிகளால் பிரச்னைகள் ஏற்படும் இடங்களில் அவற்றைக் கொல்ல கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மாநில அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் மனித உயிரிழப்புகள் குறையும்.

கடந்த பிப்ரவரியில் கேரளத்தின் வயநாட்டுக்கு சென்று மனிதா்கள்-விலங்குகள் மோதல் ஏற்படும் பகுதிகளைப் பாா்வையிட்டேன். முன்னதாக இந்த விவகாரம் தொடா்பாக கேரளத்தைச் சோ்ந்த எம்.பி.க்களும் என்னைச் சந்தித்தனா் என்றாா்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT