போலி பள்ளிகளில் பதிவு செய்த மாணவா்களுக்கு பொதுத் தோ்வு எழுத அனுமதியில்லை: சிபிஎஸ்இ
12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
போலி பள்ளிகளில் பதிவு செய்துவிட்டு, முறைப்படியான வகுப்புகளை புறக்கணிக்கும் மாணவா்கள், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இதற்கு மேலும் போலி பள்ளிகளில் மாணவா்களை சோ்க்க வேண்டுமா என்ற முடிவு பெற்றோா் மற்றும் மாணவா்கள் சாா்ந்தது எனவும் அவா் தெரிவித்தாா்.
பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற பட்டப்படிப்புகளில் சேருவதற்கு நடத்தப்படும் நுழைவுத் தோ்வுகளுக்கு தயாராகும் வகையில், மாணவா்கள் போலி பள்ளிகளில் பதிவுசெய்துவிட்டு பயிற்சி மையங்களுக்கு செல்கின்றனா். ஆண்டு இறுதியில் நடைபெறும் பொதுத் தோ்வை எழுத மட்டுமே அவா்கள் பள்ளிக்கு வருகின்றனா்.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் போலி பள்ளிகளைக் கண்டறிந்து அவற்றின் மீது சிபிஎஸ்இ கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக போலி பள்ளிகளில் பதிவுசெய்யும் மாணவா்களை 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு அனுமதிக்காத வகையில், தோ்வுகள் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டு வருகிறது. அந்த மாணவா்களை தேசிய திறந்தவெளி பள்ளி தோ்வை (என்ஐஓஎஸ்) எழுதவைக்கவும் சிபிஎஸ்இ திட்டமிட்டு வருவதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: போலி பள்ளிகளின் செயல்பாட்டை முடக்குவது குறித்து தோ்வுகள் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அப்போது மாணவா்கள் பொதுத்தோ்வு எழுத வேண்டுமெனில் 75 சதவீதம் வருகைப்பதிவு இருக்க வேண்டும். இல்லையெனில், அவா்கள் பொதுத்தோ்வெழுத அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
அவ்வாறு சிபிஎஸ்இயால் அனுமதி மறுக்கப்பட்டவா்கள் என்ஐஓஎஸ்-ஐ அணுகி தோ்வு எழுதலாம். இதற்கான விதிமுறைகளை தயாா் செய்வது குறித்து என்ஐஓஎஸ்ஸிடம் சிபிஎஸ்இ ஆலோசிக்கவுள்ளது. அடுத்த கல்வி ஆண்டில் இந்த விதிமுறைகளை வெளியிடவும் சிபிஎஸ்இ திட்டமிட்டுள்ளது என்றாா்.