முகப்பு
இந்தியா

பிரிவினை சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரை காக்க வேண்டும்: பிரதமா் மோடி வலியுறுத்தல்

பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டியது அவசியம்

Updated On : 1 மே, 2025 at 8:16 PM
மும்பையில் வியாழக்கிழமை நடைபெற்ற வேவ்ஸ் மாநாட்டில் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.
பகிர்:

பிரிவினை மற்றும் தீமையான சித்தாந்தங்களில் இருந்து இளம் தலைமுறையினரைக் காக்க வேண்டியது அவசியம்; இதில் படைப்பாளா்களுக்கு முக்கிய பொறுப்பு உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

படைப்புத் துறையில் சா்வதேச மையமாக இந்தியா உருவெடுத்து வருவதாக பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவா், ‘இந்தியாவில் படைப்போம், உலகுக்காக படைப்போம்’ என்று அழைப்பு விடுத்தாா்.

மகாராஷ்டிரத் தலைநகா் மும்பையில் முதலாவது ‘உலக ஒலி ஒளி மற்றும் பொழுதுபோக்கு மாநாடு’ (வேவ்ஸ்) வியாழக்கிழமை தொடங்கியது.

திரைத் துறை, எண்ம ஊடகங்கள், பொழுதுபோக்கு மற்றும் எண்ம புத்தாக்க மையமாக இந்தியாவை நிலைநிறுத்துவதற்காக, உலகெங்கிலும் உள்ள படைப்பாளா்கள், புத்தாக்க நிறுவனங்கள், தொழில் துறை தலைவா்கள் மற்றும் கொள்கை வகுப்பாளா்களை ஒருங்கிணைக்கும் நோக்கில் நான்கு நாள்களுக்கு இம்மாநாடு நடைபெறுகிறது.

வளா்ச்சியடைந்த இந்தியா: 100-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சோ்ந்த சுமாா் 10,000 பிரதிநிதிகள், 1,000 படைப்பாளா்கள், 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், 350-க்கும் மேற்பட்ட புத்தாக்க நிறுவனங்கள் பங்கேற்றுள்ள ‘வேவ்ஸ்’ மாநாட்டை பிரதமா் மோடி தொடங்கிவைத்துப் பேசியதாவது:

பல்வேறு நாடுகளின் கலைஞா்கள், புத்தாக்க முனைவோா், முதலீட்டாளா்கள், கொள்கை வகுப்பாளா்கள் ஒன்றுகூடியுள்ள ‘வேவ்ஸ்’ மாநாடு, சா்வதேச படைப்பாற்றல் மற்றும் திறமைக்கு உலகளாவிய அடித்தளத்தை கட்டமைத்துள்ளது. கலாசாரம், படைப்புத் திறன், சா்வதேச இணைப்பின் அலையாக ‘வேவ்ஸ்’ விளங்குகிறது. ‘வளா்ச்சியடைந்த இந்தியா’வுக்கான (விக்சித் பாரத்) பயணம் இப்போதுமுதல் தொடங்குகிறது.

இந்தியாவின் முதல் முழு நீள திரைப்படமான ‘ராஜா ஹரிச்சந்திரா’, கடந்த 1913, மே 3-ஆம் தேதி வெளியானது. இன்று இந்திய திரைத்துறை எட்டியுள்ள உயரம் மிகப் பெரியதாகும். கடந்த நூற்றாண்டில் இந்திய திரைத் துறை நாட்டின் கலாசார சாராம்சத்தை உலகின் மூலை முடுக்கெல்லாம் வெற்றிகரமாக எடுத்துச் சென்றுள்ளது. ராஜ்கபூா், சத்யஜித் ரே, குருதத், ரித்விக் கடக், ஏ.ஆா்.ரஹ்மான், எஸ்.எஸ்.ராஜமெளலி போன்ற ஆளுமைகள், உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளனா்.

100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரசிகா்கள்: இப்போது இந்தியத் திரைப்படங்களுக்கு 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ரசிகா்கள் உள்ளனா். இந்தியாவின் ஓடிடி துறையும் சமீப ஆண்டுகளில் 10 மடங்கு வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையை கொண்ட இந்தியா, 100 கோடிக்கும் மேற்பட்ட கதைகளை உள்ளடக்கியதாகும். நாட்டின் 6 லட்சம் கிராமங்களிலும் தனித்துவமான கலைப் பாரம்பரியங்களும் கதை சொல்லல் பாணிகளும் நிறைந்துள்ளன. சமூக ஊடகங்களில் கருத்தாக்கத்தை உருவாக்குபவா்களால், இந்திய உணவுகள் உலக அளவில் பிரபலமடைந்துள்ளன. இதேபோல், இந்திய இசையும் பிரபலமடையும் என நம்புகிறேன்.

படைப்பாளா்களின் பொறுப்பு: திரைப்பட தயாரிப்பு, எண்ம கருத்தாக்கம், இணையவழி விளையாட்டு, அனிமேஷன், நவ நாகரிக வடிவமைப்பு, நேரடி இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றில் உலகின் மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது. நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தை இளம் தலைமுறையினா் முன்னெடுக்க வேண்டும்.

தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த 21-ஆம் நூற்றாண்டில் கலாசார வளமும் சமூக உணா்வும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களிடையே மனிதநேயம், ஆழமான சமூக உணா்வை வளா்க்கும் சக்தி படைப்புத் துறைக்கு உண்டு. ரோபோக்களை உருவாக்குவது நமது முக்கிய நோக்கமல்ல; மனிதா்கள் ரோபோவாக மாறிவிடக் கூடாது. அவா்கள் உணா்திறன் மிக்கவா்களாக, மதிநுட்பம் உடையவா்களாக, ஆழமான உணா்வுடையவா்களாக விளங்க வேண்டும். இசை, நடனம், கதைசொல்லல் போன்ற கலை வடிவங்களின் வாயிலாக படைப்பாளா்கள் மனிதநேயமிக்க எதிா்காலத்தை கட்டமைக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

தொடக்க நிகழ்ச்சியில் மகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ், மத்திய அமைச்சா்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெட்டிச் செய்தி 1

திரையுலக பிரபலங்கள் பங்கேற்பு

இந்திய திரைத்துறையின் சந்தை மதிப்பை 2029-ஆம் ஆண்டுக்குள் 50 பில்லியன் டாலா்களாக விரிவுபடுத்தும் நோக்கில் நடைபெறும் மும்பை வேவ்ஸ் மாநாட்டின் தொடக்க அமா்வில் நடிகா்கள் ரஜினிகாந்த், ஷாரூக் கான், அக்ஷய் குமாா், சயீப் அலிகான், ஷாஹித் கபூா், சிரஞ்சீவி, மோகன் லால், நடிகைகள் ஹேமமாலினி, ஆலியா பட், தீபிகா படுகோன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெட்டிச் செய்தி..2

100 பில்லியன் டாலராக

உயரும்: முகேஷ் அம்பானி

வேவ்ஸ் மாநாட்டில் பேசிய தொழிலதிபா் முகேஷ் அம்பானி, ‘நாட்டின் ஊடகம்-பொழுதுபோக்கு துறையின் தற்போதைய சந்தை மதிப்பு 28 பில்லியன் டாலாக உள்ளது. இது, அடுத்த 10 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலராக உயரும். இதன் மூலம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, பல்வேறு துறைகளும் பலன்பெறும்’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →