ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து 165 உள்நாட்டு விமானங்களை மே 10 வரை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள ஜெய்ஸ்-இ-முகம்மது அமைப்பின் 4 இலக்குகள், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் 3 இலக்குகள் மற்றும் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் 2 தளங்கள் என 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து, செவ்வாக்கிழமை நள்ளிரவில் இந்திய முப்படைகள் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தான் பதில் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.
இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்களில் உள்ள பதான்கோட், ஜெய்சால்மர், சிம்லா, தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ், ஜோத்பூர், ஜாம்நகர், சண்டீகர், தில்லி, ராஜ்கோட் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஆகாசா ஏர் உள்ளிட்ட நிறுவனங்களின் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில், வடமேற்கு மண்டலத்தில் இயக்கப்படும் 165 க்கும் மேற்பட்ட விமானங்களை வருகின்ற மே 10 காலை 5.29 மணிவரை பாதுகாப்பு காரணமாக ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், மற்ற விமான நிறுவனங்களும் தங்களின் விமான சேவையை ரத்து செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, போர்ப் பதற்றம் காரணமாக பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் இந்தியா, பாகிஸ்தானுக்கான சேவையை ரத்து செய்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.