பிரதமர் மோடி | அனைத்துக் கட்சிக் கூட்டம் ANI
இந்தியா

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கவில்லை! இது 2-வது முறை!!

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்காதது பற்றி...

DIN

எல்லையில் ஏற்பட்டிருக்கும் போர்ப் பதற்றம் தொடர்பாக இன்று(மே 8) நடைபெற்ற 2-வது அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக எல்லையில் போர்ப் பதற்றம் நிலவி வருகிறது.

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச், குப்வாரா ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் அப்பாவி மக்கள் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக விளக்கமளிக்க மத்திய அரசு தரப்பில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் இன்று(வியாழக்கிழமை) காலை நடைபெற்றது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெ.பி.நட்டா, ஜெய்சங்கர், கிரண் ரிஜிஜு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக சார்பில் டி.ஆர். பாலு மற்றும் இதர கட்சியினர் கலந்துகொண்டனர்.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய ராணுவம் எடுத்து வரும் நடவடிக்கைகள், தற்போதைய நிலைமை குறித்து விளக்கினார்.

கூட்டம் நிறைவடைந்து வெளியே வந்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் 'மத்திய அரசுக்கு துணையாக இருக்கிறோம் எனக் கூட்டத்தில் தெரிவித்தோம். சில ரகசியத் தகவல்களை பகிர்ந்துகொள்ள முடியாது என்று அவர்கள் கூறினர்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, 'அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லையே?' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, சூழ்நிலையைப் புரிந்துகொண்டு மிக பொறுப்பான முறையில் பதிலளித்த கார்கே, "விமர்சிப்பதற்கான நேரம் இதுவல்ல, நாம் மிகவும் கடினமான காலத்தில் இருக்கிறோம். இதுதொடர்பாக பிரதமரிடம் பின்னர் கேள்வி கேட்போம்" என்று கூறியுள்ளார்.

முன்னதாக, இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச்செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியிருந்தார். எனினும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை.

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக கடந்த ஏப். 24 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“திமுக-விடம் சிக்கிக்கொண்டிருக்கிறார் திருமா” செல்லூர் ராஜு பேட்டி | ADMK | VCK

கையில் நெட்டை எடுப்பது உடலுக்கு கெடுதலா? Health Tips from Dr. Kannan

இந்த வாரம் கலாரசிகன் - 17-08-2025

கம்பனின் தமிழமுதம் - 58: முடியாது என்று சொல்லுங்கள்...

பழந்தமிழரின் ஓவியக் கலை

SCROLL FOR NEXT