பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை!
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்திப்பு பற்றி..
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும் ஜம்மு-காஷ்மீரில் உரி, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த 16 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.
மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பகுதிகளில் உள்ள மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்தும் வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். அரசு தங்களின் வருமானத்திற்கு உதவ வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரைச் சந்தித்துப் பேசினார். வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் தைரியத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.
பின்னர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் துணை நிற்கும்.
இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.