கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்பிஐ வங்கி மேலாளருக்கு எதிராக கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் நகர மாவட்டத்தின், அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்கி ஒன்றில் நேற்று (மே 20) வாடிக்கையாளர் ஒருவருடன் அந்த வங்கியின் பெண் மேலாளர் கன்னடத்தில் பேச மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்தச் சம்பவம் முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் அது இணையத்தில் வைரலாகியது.
அந்த விடியோ பதிவில், எஸ்பிஐ வங்கியின் மேலாளர், ‘நான் உறுதியாக கன்னடத்தில் பேசமாட்டேன், ஆனால் ஹிந்தியில் பேசுவேன்’ எனக் கூறுவது பதிவாகியுள்ளது.
மேலும், இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி, வங்கி ஊழியர்கள் உள்ளூர் மொழியில் வாடிக்கையாளர்களுடன் பேச வேண்டும் என்பதை அந்த நபர் மேற்கொள்காட்டிய போதிலும் அவர் கன்னடத்தில் பேச தொடர்ந்து மறுத்துள்ளார்.
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பல கன்னட ஆர்வலர்கள் மற்றும் கன்னட இயக்கங்கள் அதற்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அந்த மேலாளர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பெண் மேலாளரை எஸ்பிஐ நிறுவனம் இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனது எக்ஸ் வலைதளப் பதிவில், எஸ்பிஐ-ன் உடனடி நடவடிக்கைக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அந்த மேலாளரின் நடவடிக்கைக்கு தனது கண்டனங்களையும் பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:
”அனேக்கல் தாலுக்காவிலுள்ள எஸ்பிஐ வங்கியின் சூரிய நகர கிளை மேலாளர், கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பேச மறுத்த செயலானது கடும் கண்டனத்துக்குரியது. அந்த நிர்வாகியை உடனடியாக இடமாற்றம் செய்த எஸ்பிஐயின் நடவடிக்கைக்கு எங்களது பாராட்டுக்கள். இதனால், இந்த விவகாரம் இப்போது மூடிக்கப்பட்டதாகக் கருதப்படும்” எனக் கூறியுள்ளார்.
இருப்பினும், இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறக் கூடாது எனவும் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை மரியாதையாக நடத்துவதுடன், உள்ளூர் மொழியைப் பேச முயற்சி செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இத்துடன், அந்தப் பதிவில், மத்திய நிதி அமைச்சகத்தைக் குறிப்பிட்ட அவர் இந்தியா முழுவதுமுள்ள வங்கி ஊழியர்களுக்கு, கலாசாரம் மற்றும் மொழி உணர்திறன் பயிற்சியைக் கட்டாயமாக்க வேண்டுமெனவும் முதல்வர் சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.