பாகிஸ்தானுக்கு அதிகளவில் ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து இரண்டாவது நாடாக இருந்துள்ளது.
இந்தியா, நெதர்லாந்து நாட்டின் மிக முக்கிய வர்த்தகக் கூட்டாளியாக இருக்கும் நிலையில், துருக்கியைப் போல அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு தயாராகி வருகிறது என்றும், பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் கொடுக்கக் கூடாது என நெதர்லாந்துக்கு இந்தியா தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
பாகிஸ்தானின் ராணுவ வலிமையை கூட்டியதில் சீனா, துருக்கி, நெதர்லாந்து நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, துருக்கி போன்றே பல்வேறு எதிர்மறையான நடவடிக்கைகளை நெதர்லாந்து சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆறு நாள்கள் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். டென்மார்க், ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து செல்லும் அவர், மே 19ஆம் தேதி முதல் நாடாக நெதர்லாந்து சென்றடைந்துள்ளார். ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சரின் முதல் வெளிநாட்டுப் பயணம் அதுவும் பாகிஸ்தானுக்கு ஆயுதங்களைக் கொடுத்து உதவிய நெதர்லாந்துக்கு என்பதால் இந்த பயணம் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்தபோது அதற்கு நெதர்லாந்து கண்டனம் தெரிவித்தது. ஆனால், சண்டை தொடங்கியபோது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நெதர்லாந்து வலியுறுத்தியது. இந்த நிலையில்தான், பாகிஸ்தானுடன் நெதர்லாந்துக்கு இருக்கும் தொடர்பைத் துண்டிக்க எந்த உபாயத்தை இந்தியா பயன்படுத்தப் போகிறது என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்தியா தனது பொருளாதாரப் பலத்தைக் கொண்டுதான், பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை வழங்கும் நெதர்லாந்து நாட்டைத் தடுக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியா, 22 பில்லியன் டாலர் அளவுக்கு நெதர்லாந்துடன் வர்த்தகம் மேற்கொள்கிறது. மேலும், இந்திய பாதுகாப்புத் துறை சந்தைக்குள் நெதர்லாந்து நுழைய விரும்புகிறது. அந்த வாய்ப்பை வழங்கவும் மத்திய அரசு தயாராகவே உள்ளது. இதனைக் கொண்டு, நெதர்லாந்துக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை, பாகிஸ்தானுக்காக, இந்தியாவுடன் நெதர்லாந்து பகை பாராட்டினால், மிகப்பெரிய வர்த்தக வாய்ப்புகளை இழக்க நேரிடும். சீனா அல்லது துருக்கியைப் போல எதிர்மறையான நடவடிக்கைகளை சந்திக்கக் கூடும். அந்த வாய்ப்பை நெதர்லாந்து தேர்வு செய்யாது என்றே கூறப்படுகிறது.
பாகிஸ்தானுக்கு 81 சதவீத ஆயுதங்களை சீனாவும், 5.5 சதவீத ஆயுதங்களை நெதர்லாந்தும் 3.8 சதவீத ஆயுதங்களை துருக்கியும் வழங்குவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆயுத உதவி வழங்கிய துருக்கி
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், பாகிஸ்தானுக்கு ட்ரோன் உள்ளிட்ட ஆயுதங்களை துருக்கி அவசரமாக அனுப்பி உதவியது. பாகிஸ்தான் அதனைக் கொண்டுதான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் நல்வாய்ப்பாக அனைத்துத் தாக்குதல்களையும் இந்தியா வெற்றிகரமாக எதிர்கொண்டு முறியடித்தது.
ஏற்கெனவே காஷ்மீா் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் இந்தியாவுக்கு எதிராக துருக்கி அதிபா் எா்டோகன் கருத்து தெரிவித்துவந்தார்.
இந்தநிலையில்தான், துருக்கி, பாகிஸ்தானுக்கு ஆயுத உதவிகளை அளித்ததால், இந்தியா கடும் அதிருப்தியடைந்தது.
இதனால், துருக்கி உடனான வா்த்தக உறவுகளை குறைக்க இந்தியா பரிசீலித்து வருகிறது. இந்தியா்கள் துருக்கிக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்றும், அந்நாட்டுப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டாம் என்ற பிரசாரமும் சமூகவலைதளங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.