தேசிய நெடுஞ்சாலை 66 Center-Center-Kochi
இந்தியா

புதிதாக அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலையாம்! ஒரு மழைக்கே இப்படியா?

கேரளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த தேசிய நெடுஞ்சாலை ஒருநாள் பெய்த மழையில் மோசமாக சேதமடைந்துள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

கேரள மாநிலத்தில் ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த பலத்த மழையில், சுமார் 644 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுவந்த ஆறுவழி தேசிய நெடுஞ்சாலை, கடுமையாக சேதமடைந்திருப்பது, கட்டுமானப் பணிகள் குறித்து மாநில மக்களின் கவலையை அதிகரிக்கச் செய்திருக்கிறது.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், கூரியாத் பகுதியில் கட்டமைக்கப்பட்டு வந்த தேசிய நெடுஞ்சாலை 66-ன் ஒரு பகுதி, ஒரு சில நாள்களுக்கு முன்பு பெய்த மழையால் கடுமையாக சேதமடைந்துள்ளதைக் கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கட்டுமானப் பணி நடந்துகொண்டிருக்கும்போதே, மழையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கும் தேசிய நெடுஞ்சாலையால், ஒப்பந்தப் பணியை மேற்கொண்டு வருவோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நல்லவேளையாக, இந்த சாலை திறக்கப்படாததால் உயிராபத்து நேரிடவில்லை என்றாலும், இந்த கட்டுமானத்தின்படி, 644 கிலோ மீட்டருக்கு ஆறுவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஒட்டுமொத்தப் பணியும் கேள்விக்குறியாகியிருப்பதாகக் கூறுகிறார்கள் உள்ளூர் மக்கள்.

ஏதோ நிலநடுக்கம் வந்தது போல, சாலை தாறுமாறாக சிதறியும், தண்ணீர் தேங்கியும் காணப்படும் புகைப்படங்களும் விடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருக்கிறது.

இந்த சாலை மட்டுமல்லாமல், இதன் ஒரு பகுதியாக காசர்கோடு அருகே சர்வீஸ் சாலையும் சேதமடைந்து மண்ணோடு மண்ணாகியிருப்பது மக்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது.

ஏராளமான விவசாய நிலங்களை எல்லாம் கைப்பற்றியே, இந்த தேசிய நெடுஞ்சாலை கட்டப்பட்டு வரும் நிலையில், கூரியாத் அருகே நெடுஞ்சாலையே சேதமடைந்திருக்கும் நிலையில், சர்வீஸ் சாலையும், அதன் சுற்றுச்சுவரும் சேதமடைந்து சில வாகனங்களும் அதில் சிக்கிக்கொண்டிருக்கும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.

தேசிய நெடுஞ்சாலை

விவசாயப் பகுதி என்பதால், மழைக் காலங்களில் வழக்கமாக தண்ணீர் தேங்கும் பகுதியாக இருந்துள்ளது. அப்படியே இருந்தாலும் இது ஒன்றும் மழைக்காலம் இல்லை. இந்த சாலையில் வாகனங்களும் சென்று வந்துகொண்டிருந்தது. இங்கே பனம்புழா மற்றும் கடலுன்டிபுழா ஆறுகள் ஓடிக்கொண்டிருப்பதால், மிகவும் அபாயகரமான பகுதியாக இது இருக்கிறது. எனவே, இங்கிருக்கும் மண்ணின் தரத்தை சோதித்தே, தேசிய நெடுஞ்சாலைக் கட்டுமானப் பணிகள் மிகவும் கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு காரணமாக, ஒட்டுமொத்த கேரள மக்களும் கவலை அடைந்துள்ளனர். நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள் எந்த அளவுக்கு உறுதியோடு இருக்கும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

விஞ்ஞானப்பூர்வமாக ஆய்வு செய்யாமல், அவசர கதியில் வேலை நடந்து வந்ததே இதற்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது. வெளிநாட்டு தொழில்நுட்பங்கள், கேரள மண்ணுக்கு பொருந்தாது என்றும் தேவையான அளவுக்கு கான்கீரீட் சுவர்கள் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இத்துனைக் குற்றச்சாட்டுகளையும் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் மறுத்துள்ளது. திட்ட இயக்குநர் இது பற்றி விளக்கம் கொடுக்கையில், மழைக் காரணமாக, நெடுஞ்சாலையின் கீழ்ப் பகுதி தளர்வடைந்ததால்தான் இந்த சேதம் ஏற்பட்டுள்ளது. மண் சரிந்து, சாலையும் சற்று சரிந்துள்ளது. இது குறித்து மூன்று பேர் கொண்ட நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜிம்கானா... பூனம் பாஜ்வா!

‘மௌ'..னி...கா.... மௌனி ராய்!

விஜய் பக்குவப்படவில்லை: அமைச்சர் அன்பில் மகேஸ்

10 கோடி பார்வைகளைக் கடந்த மோனிகா பாடல்!

இந்திய பேட்டிங் வரிசையில் ‘தடுப்புச் சுவராக’ திகழ்ந்தவர்! -புஜாராவுக்கு பிசிசிஐ புகழாரம்

SCROLL FOR NEXT