பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்து, அந்நாட்டின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை முன்னெடுத்தது. இந்தத் தாக்குதலின்போது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், முக்கிய உலக நாடுகளுக்கு விளக்கமளிக்க பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி. குழுக்கள் சென்றுள்ளன. அந்த வகையில், அமெரிக்கா சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் பேசியதாவது ``பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே நாங்கள் வந்துள்ளோம். நாம் அனைவரும் ஒன்றாகப் போராட வேண்டிய மற்றும் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள விவகாரம் இது. காஷ்மீரின் அமைதி, வளங்களைச் சேதப்படுத்தவே தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி, மக்களின் மதம் என்னவென்று கேட்டபின்னரே, அவர்களை படுகொலை செய்தனர். இந்தத் தாக்குதல், இந்தியா முழுவதும் எதிர்வினையைத் தூண்டியது. மக்களைப் பிரிப்பதே, இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருந்தபோதிலும், அது மக்களை ஒன்றிணைக்கத்தான் செய்தது.
இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டன்ட் முன்னணி அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டது. இந்த இயக்கமானது, அமெரிக்காவின் பயங்கரவாதப் பட்டியலிலும், ஐ.நா. அவையின் தடைசெய்யப்பட்ட பட்டியலிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இதனை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.
பயங்கரவாதத்துக்கு பதிலடி கொடுக்க சரியான நேரம் இதுதான். அதைத்தான் இந்தியா செய்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம் துல்லியமான தாக்குதலால் பாகிஸ்தானில் 9 பயங்கரவாத முகாம்களை இந்தியா குறிவைத்து தாக்கியது.
பயங்கரவாதத்தை அழிக்கும் எந்த முயற்சியும் பாகிஸ்தான் மேற்கொள்வதில்லை. மாறாக, அவர்களுக்கு அடைக்கலம்தான் அளித்து வருகிறது. இதன் எதிர்விளைவைத்தான் பாகிஸ்தான் பெறவிருக்கிறது என்று தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.