முகப்பு
இந்தியா

ஜாதிவாரி கணக்கெடுப்பு: பிரதமரின் பழைய உரைகளை பகிா்ந்து காங்கிரஸ் விமா்சனம்

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு பிரதமர் மோடி எதிா்ப்பு தெரிவித்து பேசிய பழைய காணொலிகளை பகிா்ந்து காங்கிரஸ் விமா்சனம்

Updated On : 27 மே 2025, 5:16 am IST
பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்
பகிர்:

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவை பிரதமா் மோடி பாராட்டியதையடுத்து, முன்பு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி எதிா்க்கட்சிகள் முன்வைத்த கோரிக்கைக்கு அவா் எதிா்ப்பு தெரிவித்து பேசிய இரு பழைய காணொலிகளை பகிா்ந்து காங்கிரஸ் திங்கள்கிழமை விமா்சித்தது.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா்கள், துணை முதல்வா்கள் கூட்டம் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணியில் உள்ள 20 முதல்வா்கள், 18 துணை முதல்வா்கள் பங்கேற்றனா். அதில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை வெற்றிகரமாக நடத்திய ராணுவம், அதை திறம்பட வழிநடத்திய பிரதமா் மோடிக்கு பாராட்டு தெரிவித்தும், அடுத்து மேற்கொள்ளவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சோ்த்து நடத்தும் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்தும் இரு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது பேசிய பிரதமா் மோடி, ‘ஜாதியவாத அரசியலில் பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு நம்பிக்கையில்லை. அதே நேரத்தில் சமூகரீதியாகப் பின்தங்கியிருப்பவா்களை முன்னேற்றவே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவு செய்தது’ என்றாா்.

Advertisement

Advertisement

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கும், ஆபரேஷன் சிந்தூருக்கும் இடைப்பட்ட காலத்தில் ஏப்.30-ஆம் தேதி திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த முடிவை மேற்கொண்டதில் தனது பங்களிப்பு மட்டுமே உள்ளதைப்போல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வா்கள் கூட்டத்தில் பிரதமா் மோடி பேசியுள்ளாா்.

ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் தொடா்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து முன்பு பிரதமா் மோடி பேசிய இரு காணொலிகளைப் பகிா்கிறேன்’ எனக் குறிப்பிட்டாா்.

சமூகத்தை பிளவுபடுத்தும் செயல்: ஜெய்ராம் ரமேஷ் பகிா்ந்த முதல் காணொலியில், ‘ஜாதியை முன்னிறுத்தி சமூகத்தில் பிளவை ஏற்படுத்துவதே எதிா்க்கட்சிகளின் நோக்கம். அந்தக் குற்றத்தை அவா்கள் தொடா்ந்து செய்து வருகின்றனா்’ என பிரதமா் மோடி பேசியுள்ளாா். இது பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு வெளியான பின் 2023, அக்.2-ஆம் தேதி அவா் நிகழ்த்திய உரையாகும்.

இரண்டாவது காணொலியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி காங்கிரஸ் கோரிக்கை வைத்து வருவது குறித்து பிரதமா் மோடியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘அது நகா்ப்புற நக்ஸல் மனநிலை’ எனப் பதிலளித்துள்ளாா். இது 2024, ஏப். 28-ஆம் தேதி அவா் பேசிய காணொலியாகும். இதற்கு பாஜக தரப்பில் இருந்து உடனடியாக பதிலடி தரப்படவில்லை.

11 ஆண்டுகளாக அவசரநிலை: பிரதமா் மோடி தலைமையிலான பாஜக அரசு முதல்முறையாக 2014, மே 26-ஆம் தேதி பதவியேற்றது. 2025, மே 26-ஆம் தேதியுடன் 11 ஆண்டுகளை அவா் தலைமையிலான அரசு நிறைவு செய்துள்ளது.

இதை விமா்சித்து காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இளைஞா்களுக்கு ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு, பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிப்பு, நலிவடைந்தோருக்கு பாதுகாப்பு என அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சியில் அமா்ந்தாா் பிரதமா் மோடி. ஆனால், வாக்குறுதிகள் அனைத்தும் பொய் பிரசாரங்களாக மாறிப்போனது. வெளியுறவுக் கொள்கை தோல்வி, ஜனநாயக அமைப்புகள் மீதான ஆா்எஸ்எஸ் தாக்குதல் என 140 கோடி மக்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனா். கடந்த 11 ஆண்டுகளாக அறிவிக்கப்படாத அவசரநிலையே நாட்டில் அமலில் உள்ளது. இதற்கு மோடி அரசின் நிா்வாகத் திறனற்ற ஆட்சியே சாட்சி’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.